Friday, 25 December 2020

நன்றி உஸ்தாஸ்!

 மனிதம் இன்னும் வாழ்கிறது என்பதற்கு உஸ்தாஸ் எபிட் லூ ஒர் உதாரணம். வாழ்த்துகள் உஸ்தாஸ்!

Thanks: FMT News

ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் கணேஷ் சௌந்தரராஜா-பரமேஸ்வரி தம்பதியினரைப் பற்றியான செய்தியை FMT வெளியிட்டிருந்தது.

அவர்கள் வீடு எரிந்த பின்னர் தங்குவதற்கு வீடு இல்லை.வாடகை வீட்டில் வாடகைக் கொடுக்க கணவரின் சம்பளம் போதுமானதாக இல்லை. அவர் செய்வது பாதுகாவலர் வேலை. 

அதனால், வேறு வழி இல்லாமல், அவர் தனது காரிலேயே தனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் வாழ வேண்டிய கட்டாயம். 


இப்படித்தான் கடந்த எட்டு மாதங்களாக தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.அவர்களது கடைசி  மகள் கீர்த்தனா தேவி, எட்டு மாதங்களுக்கு முன்னர் பிறந்தவள், காரைத் தவிர வேறு உலகத்தைப் பார்த்ததில்லை.  அவர்கள் தண்ணீர் பிரச்சனையத் தீர்த்துக் கொள்ள அருகிலுள்ள பொது கழிப்பறைகள் பயன்படுத்தினர். பசியைத் தீர்த்துக் கொள்ள ஏதோ அவ்வப்போது - சொல்லும்படியாக ஒன்றுமில்லை.

நமது இயக்கங்கள் பிரச்சனை வந்த போது, வந்தார்கள்! பார்த்தார்கள்! அரிசி பருப்புகளைக் கொடுத்தார்கள்! படம் எடுத்தார்கள்! அதற்கு அப்புறம் அனைவரும் மறந்து போனார்கள்! அவர்கள்  தங்குவதற்கு எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை! ஒரு குடும்பத்திற்கு என்ன முக்கியம் என்பதைக் கூடத் தெரியாத தலைவர்கள் எல்லாம் தொண்டு செய்ய வந்துவிட்டார்கள்!

மனிதர்கள் கைவிட்டாலும் கடவுள் கைவிடமாட்டார் என்பார்கள். செய்தியைப் படித்துவிட்டு உஸ்தாஸ் எபிட் லூ,  ஜோகூரிலிருந்து பினாங்கிற்கு ஓடோடி வந்தார். ஒரு வீடு பார்த்துக் கொடுத்தார். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்  கொடுத்தார்.  தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனைப் பெட்டி இன்னும் பல எலெக்டிரிக் பொருள்களை வாங்கிக் கொடுத்தார். போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு வாங்கிக் குவித்திருக்கிறார்! அரசாங்கத்திலிருந்து எந்த நேரத்திலும் அவருக்கும் வீடு கிடைக்கலாம். அது வரை வீட்டுக்கான வாடைகையும் அவர் கொடுக்க உறுதி அளித்திருக்கிறார்.

இதைத்தான் நாம் மனிதம் என்கிறோம். இதற்கு முன்  எந்த ஒரு உஸ்தாஸும் இப்படி களத்தில் இறங்கி வேலை செய்ததாக ஞாபகமில்லை. உஸ்தாஸ் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்க பிரார்த்திக்கிறோம்.

இனி கணேஷ் சௌந்தரராஜா தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும்.  பலத்த அடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். அவர் சொந்தமாக காய்கறி வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற ஆசையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அது நடக்கும் என நம்பலாம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவும் மறக்கமாட்டார் எனவும் நாம் நம்பலாம்.

நண்பரை நாம் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். இவ்வளவு இக்கட்டான் நிலையிலும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது.

நன்றி உஸ்தாஸ்! சொல்ல வார்த்தை இல்லை!

No comments:

Post a Comment