Monday 14 December 2020

ஒரு தண்ணி போய் இன்னொரு தண்ணி!

 கெடா மாநில மந்திரி பெசாருக்கு ஒரு தண்ணி போனால் இன்னொரு தண்ணி வம்பில் மாட்டி விடுகிறது!

இவருக்கும் தண்ணிக்கும் ராசி இருப்பதாகத் தெரியவில்லை!  தண்ணியிலேயே இவருக்குக் கண்டம் இருப்பதாகத் தெரிகிறது! ஒரு தண்ணியை விட்டால் இன்னொரு தண்ணி!

இந்தியர்கள் கள் (தண்ணி) அடித்துவிட்டுப் பேசுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். கள் அடித்துவிட்டுப் பேசினால் நான் மகிழ்ச்சியடைவேன். கள் உடம்புக்கு எந்த பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று இன்றும் நம் பெரியவர்கள் சொல்லுவார்கள்!

ஆனால் இன்றைய நிலையில் கள் அடிப்பது என்பது மிகவும் குறைவு. கள் குடிப்பதற்குப் பேர் போன இடம் புக்கிட் பெளாண்டோக் - ராமநாதபுரம் என்று தமிழில் சொல்லுவார்கள்! அந்த இடத்திற்குத் தான் கள் குடியினர் தேவை என்றால் படையெடுப்பார்கள்!

ஆனால் இப்போது நாம் குடிப்பது எல்லாம் சம்சு தண்ணி. அதைப் கௌரவமாக போத்தலில் அடைத்து விற்பதை நாம் பார்க்கிறோம். அதனால் குடல் வெந்து சாகிறோம்!

இப்போது மந்திரி பெசாருக்கு வேறு தண்ணீர் பிரச்சனை.  பினாங்குக்கும் அவருக்கும் ஏற்பட்டிருக்கிறது!

"நாங்கள் பினாங்கிற்கு குடி தண்ணீர் கொடுக்கமாட்டோம்! அதற்கான கட்டணம் கொடுத்தால் மட்டுமே நாங்கள் தண்ணீர் கொடுப்போம்!" என்கிறார் கெடா மாநில மந்திரி பெசார்!

மந்திரி பெசார் பினாங்கிடமிருந்து கேட்கும் இழப்பீடு எவ்வளவாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?  ஒவ்வொரு ஆண்டும் ரி.ம.50 மில்லியன் கொடுக்க வேண்டும் என்பது அவர் கேட்கும் இழப்பீட்டுத் தொகை!

"தண்ணீர் கொடுக்க மாட்டோம்!" என்கிறார் மந்திரி பெசார். ஆனால் பினாங்கு அரசாங்கமோ "தண்ணீர் கொடுப்பதை நிறுத்திப்பார்!" என்று சவால் விடுகிறது!

கெடா மந்திரி பெசாருக்கு இந்து கோவில்களை உடைப்பது என்பது எளிது! காரணம் அவர் கட்சியின் மேலிடம் அவரை ஆதரிக்கிறது! இப்போது மத்தியிலும் கொல்லைப்புற அரசாங்கத்தாலும் அவர் ஆதரிக்கப்படுகிறார்! அதனால் இந்து கோவில்களின் மேல் அவர் அலட்சியத்தைக் காட்டலாம்.

ஆனால் தண்ணீர் பிரச்சனை என்பதும் இந்து  கோவில்கள் உடைப்பது என்பதும் வெவ்வேறு பிரச்சனைகள். எல்லாவற்றிலும் அவர் அலட்சியமாக அணுகுகிறார்!

தண்ணிரை நிறுத்தினால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  பொது மக்கள் யார்? பாஸ், அம்னோ. ம.சீ.ச. ம.இ.கா. கெராக்கான் - இப்படி அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் தான் பொது மக்கள்.

பினாங்கு அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் உதவி இல்லாமல் தன் சொந்த முயற்சியால் பல பிரச்சனைகளை இது வரை தீர்த்து வந்திருக்கிறது. இதனையும் தீர்த்துக் கொள்ள அவர்களால் முடியும் என்பதை மந்திரி பெசார் புரிந்து கொள்ள வேண்டும்.

பிரச்சனைகள் வரும் போது "அது கடவுள் செயல்!" என்று கடவுளின் மேல் பழி போடுவது பினாங்கு மாநிலம் அல்ல! அதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்!

இன்னும் என்ன என்ன தண்ணீர் பிரச்சனைகளைச் சந்திக்கப் போகிறாரோ!

No comments:

Post a Comment