Wednesday 23 December 2020

கோவிட் 19 தடுப்பூசி போடும் முதல் நபர்!

 கோவிட்-19 தடுப்பூசி போடும் முதல் நபர் யார் என்று நாம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை!

அந்த பொறுப்பை நமது பிரதமர் டான்ஸ்ரீ முகம்மது யாசின் எடுத்துக் கொண்டார். அதாவது இந்த தடுப்பூசி போடுவதன் மூலம் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்று அதன் மூலம் அவர் உறுதிப்படுத்துகின்றார்.

இந்த தடுப்பூசியை அவ்வளவு சீக்கிரத்தில் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மை தான். அந்த அளவுக்கு அவநம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் விஞ்ஞானிகளால் கண்டுபடிக்கப்பட்டுள்ள இந்த மருந்தை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வேறு வழியில்லை!

அதனால் தான் பிரதமரே முதல் தடுப்பூசியைப் போட்டு "பயப்படாதீர்கள்!" என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறார்!

இந்த நேரத்தில் நாமும் சில நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.

பெரிதாக ஒன்றுமில்லை. பிரதமருக்குப் பிறகு அவருடைய அமைச்சரவையில் உள்ள அனைவரும் தடுப்பூசிகளைப் போட வேண்டும். அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வது நல்லது.

இதன் மூலம் மக்களைப் பிரதிநிதிக்கும் பிரதிநிதிகள் தடுப்பூசிகளைப் போட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

இதற்குக் காரணம் இவர்கள் தான் மக்களை ஏமாற்றுபவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள். இவர்கள் இங்குத் தடுப்பூசி போடாமல் நேரடியாக இங்கிலாந்துக்கோ, அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ போய் தங்களது திமிரைக்  காட்டுபவர்கள்.

அதனால் பிரதமரின் முதல் குறி  இவர்களாகத்தான் இருக்க வேண்டும். இவர்கள் தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இவர்கள் இங்கு எதைச் செய்தாலும் அதில் தரமில்லை என்று சொல்லி மேற்கு நாடுகளைப் பார்ப்பவர்கள். அங்கு நோக்கி ஓடுபவர்கள்!

சாதாரணப் பிரச்சனைகளுக்குக் கூட வெளி நாடுகளுக்கு ஓடிப்போய் சிகிச்சை பெறுபவர்கள்.  இவர்கள் எல்லாம் அரசியலில் கொள்ளையடிப்பவர்கள்; கொள்ளையடித்தவர்கள்!

நாம் பிரதமருக்கு சொல்ல வேண்டிய ஆலோசனை என்பது முதலில் நாட்டை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு முதல் மரியாதையாக இருக்கட்டும்! அங்கு ஏதும் ஆபத்து இல்லையென்றால் அத பின்னர் பொது மக்களுக்கு வரட்டும். 

இந்த நேரத்தில் நாம் பிரதமரைப் பாராட்டுவோம்! அத்தோடு அவர்கள் குடும்பத்தையும் பாராட்டுவோம்! அவர்கள் தான் நாட்டுக்கு நல்லதை எண்ணுபவர்கள்!

பிரதமரை வாழ்த்துகிறோம்!

No comments:

Post a Comment