ஒரு சில விஷயங்களில் நாம் ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறோம் என்பது புரியாத புதிர்.
கோவில்கள் என்பது புனிதமான இடம். பொதுமக்கள் வந்து வழிபடுகிற இடம். அதற்குத் தனியாக இடம் வேண்டும். அந்த இடம் அமைதியாக இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அது ஆகம முறைப்படி கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னர் அந்த கோவில் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்போது தான் அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற கோவில் என்கிற தகுதியைப் பெறும்.
கோவில்கள் கட்டுவதற்கு பல சட்ட திட்டங்கள் உள்ளன. குடியிருக்கும் நமது வீடூகளுக்கு முன்பகுதியில் கோவில்கள் கட்டுவது இறைவனை அவமதிக்கும் செயல். நமது வீடுகளில், ஒவ்வொருவர் வீட்டிலும், நமது குடும்பம் வழிபடுவதற்கு "சாமி அறை" என்றே பலர் வைத்திருக்கின்றனர். அப்படியே சாமி அறை இல்லாவிட்டாலும் நமது வழிபாட்டுக்கு ஒர் இடத்தை ஒதுக்கியிருப்போம். நமது வீட்டிலேயே நாம் ஒவ்வொரும் கோவிலை வைத்திருக்கிறோம். அது தான் முறை.
நமது குடும்பம் வழிபட ஒரு கோவில், அதுவும் வீடுகளின் முன்னே அல்லது தெருவில், மற்றவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கும் வகையில், ஒரு கோவிலைக் கட்டி, நான் வழிபட, என் குடும்பம் வழிபட, என்று ஏதோ தனக்கும் இந்த உலகத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று நினைப்பது மிகவும் கேலிக்குரிய செயல். கோவில் கட்டுவதாலேயே புனிதம் வந்து விடாது! பணம் இருக்கிறது கோவில் கட்டுவேன் என்று சொல்லுவது திமிரைக் காட்டும்!
கோவில் என்பது நமது பணத்திமிரைக் காட்டும் இடமல்ல! அதற்குப் பதில் நாலு ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டால் புண்ணியம் கிடைக்கும் என்பது தான் உண்மை.
கோவில் நிர்வாகம் சரியில்லை என்பதற்காக சொந்தமாக கோவில் கட்டுவேன் என்பது முட்டாள் தனம். கோவிலுக்குப் போவது இறைவனை வணங்க, நிர்வாகத்தை வணங்க அல்ல! அவ்வளவு தான்!
அதனால் கோவில்களை உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கட்டிக் கொள்ளாதீர்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள்!
No comments:
Post a Comment