Monday 21 December 2020

எண்ணிக்கை குறைகின்றது

 தமழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைகின்றது  என்கிற செய்தி நம்மை வருத்தமடையச் செய்கின்றது.

பத்து மாணவர்களுக்குக் குறைவான தமிழ்ப்பள்ளிகள் இப்போது நாடெங்கும் கூடிக்  கொண்டு வருகின்றன. மொத்தம் 523 தமிழ்ப்பள்ளிகளில் சுமார் 28 பள்ளிகள் பத்து மாணவர்களை விடக்  குறைவாக இருக்கின்றன  என்பதாகக் கூறப்படுகின்றது.

ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் பத்து ஆசிரியர்களாவது பணி புரிகின்றனர். ஆனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை என்பது ஆசிரியர்களை விடக் குறைவானதாக இருக்கின்றது. அதாவது ஒரு மாணவர், இரண்டு மாணவர்கள்,  ஐந்து மாணவர்கள் - என்று இப்படி பத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் இருக்கின்றனர்! அதாவது மாணவர்களை விட ஆசிரியர்கள் கூடுதலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அது தான் அதன் சுருக்கம்!

தாய் மொழிப்பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு வெறுப்பு ஏதேனும் ஏற்பட்டுவிட்டதா என்றால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தங்களின் பிள்ளைகள் படிக்கின்ற பள்ளிகள் தரமான கட்டிடங்களில் இயங்க வேண்டும்  என்பது தான் பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பம். அந்த காலத்தின் நிலைமை வேறு. இப்போதுள்ள இளம் பெற்றோர்களின் நிலைமை வேறு. கட்டிடம் தரமாக இருக்க வேண்டும் என்பதோடு கல்வி கற்கும் சூழல் ஏற்றதாக இருக்க வேண்டும்.

இன்னொன்றையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்ப்பள்ளிகளில் அரசியல் விளையாட்டுகள் அதிகம்.  அதனால் மாணவர்களின் நலனை விட,  பள்ளிகளின் நலனை விட ஆசிரியர்களின் நலன் அதிகம் பேணப்படுகிறது.  தங்களுக்குச் சாதகமான சூழல் இல்லை என்றால் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் அளவுக்குத்  தூண்டப்படுகின்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்கங்களில் ஒற்றுமையின்மை இன்னொரு பக்கம்.இவைகள் எல்லாம் பெற்றோர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துகின்றன.

இப்போதெல்லாம் தமிழ்ப்பள்ளிகளின் கல்வியின் தரம் பாராட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கின்றது.   ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும்  மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கின்றது.

வருங்காலங்களில் கல்வியின் தரம் தான் முக்கியமாகக் கவனிக்கப்படும்.  தரத்தை வைத்துத்  தான் பெற்றோர்கள் முடிவு செய்வார்கள். 

இப்போதெல்லாம் உலக அளவில் பல விஞ்ஞான போட்டிகளில்,  கண்டுபிடிப்புகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் நிறைய தங்கப்பதக்கங்களை வாங்கிக்  குவிக்கின்றனர். UPSR தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி பெறுகின்றனர். பெற்றோர்களின் பார்வையில் இவைகள் தான் தரமான பள்ளிகள் என்பதாகப் பேசப்படுகின்றது. 

ஏன் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை  குறைகின்றது என்று கேட்டுக் கொண்டிருப்பதை விட  பள்ளிகளின் கல்வித்தரம் தான் அதனை முடிவு செய்யும் என்பதையும் நாம் புரிந்த கொள்ள  வேண்டும்.

ஆசிரியர் சமூகம் தான் இதற்கு ஒரு முடிவு காண வேண்டும்!

1 comment:

  1. https://www.facebook.com/photo/?fbid=187641577585413&set=pcb.187667777582793

    ReplyDelete