Sunday 20 December 2020

அரசியல் வலிமை அசாத்தியமானது!

 முன்பை விட இப்போது நமக்கு அதிகமாகவே புரிகிறது,  அரசியல் வலிமை அசாத்தியமானது என்று!

நொண்டி அடித்துக் கொண்டிருந்த அரசாங்கம் இப்போது நம்மை நொண்டி அடிக்க வைக்கிறது! நம்மால் ஒன்றும் செய்ய இயலாது! காரணம் அரசியல் வலிமை யாரிடம் இருக்கிறதோ அவன் தான் வலிமை வாய்ந்தவன்! அது ஒரு வாக்கோ இரண்டு வாக்குகளோ  கூடுதலாக இருந்தாலும் அதுவே போதும் பதவியில் நீடிப்பதற்கு!

இப்போது இந்த  வழக்கைப் பற்றி பார்ப்போம். இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்சா.  தனது மகள் பதினோரு மாத குழந்தையாக இருந்த போது அவரது முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்டு இப்போது பதினோரு ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது நீதிமன்றம் கொடுத்த ஆணை. ஆனால் அந்த கணவனோ நீதிமன்றத்தை மதிக்கவில்லை! குழந்தை தாயிடம் வந்தபாடில்லை.

காவல்துறைத் தலைவர் பலவிதமான சாக்குப் போக்குகளைச் சொல்லி வருகிறாரே தவிர குழந்தை தாயிடம் வந்து சேரவில்லை. 

இடையில் அரசாங்கத்தில் ஒரு மாற்றம். புதிய அரசாங்கம் பதவியேற்றது. இப்போது காவல்துறைத் தலைவரிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. கண்டுபிடிக்க முடியவில்லை என்று தொடர்ச்சியாகச் சொல்லி வந்தவர் இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டார்.  "இடம் தெரியும்! இப்போது பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மூத்த தலைவர் மூலம் சமரசமாகப் போக பேசிக் கொண்டிருக்கிறோம்!" என்று கொஞ்சம் இறங்கி வந்தார்!   

அவர் பேச்சு நமக்கும் நம்பிக்கை தந்தது.  சில பேச்சு வார்த்தைகளும் நடந்தன. எல்லாமே நம்பிக்கை தருபவனவாக இருந்தன. நாமும் காவல் துறைத் தலைவரைப் பாராட்டினோம். எல்லாமே சரியாக போய்க் கொண்டிருந்த நேரம்.

தீடீரென அரசாங்கம் கவிழ்ந்தது! யாரும் எதிர்பார்க்கவில்லை. சுமுகமாகப் போய்க் கொண்டிருந்த பேச்சு வார்த்தைகள் தீடீரென பின் வாங்கியது! ஏன் என்று புரியவில்லை!

மீண்டும் காவல்துறைத் தலைவர் பின் வாங்கினார். பழைய பூஜ்ய நிலைக்கே திரும்பிவிட்டார்! இப்போது அவர் என்ன சொல்லுகிறார்? "குழந்தையின் தகப்பனாரைக் கண்டு பிடிக்க முடியவில்லை! அவர் தொடர்ந்து தனது முகவரியை மாற்றிக் கொண்டே இருக்கிறார்!  அடிக்கடி இடம் மாறுவதால் காவல்துறையினரால் கண்டு பிடிக்க முடியவில்லை! அவர் முகவரி தெரிந்தவர்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள்!"

இங்கு நாம் காவல்துறைத் தலைவரைக்  குற்றம் சொல்லவில்லை. அவரை அரசியல் அதிகாரம் கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் நாம் சொல்ல வருகிறோம்.

குறைந்த மாதங்களே ஆட்சி செய்த அரசாங்கத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. நீதிமன்ற ஆணையை மதிக்க வேண்டும் என்கிற கடப்பாடு அவர்களுக்கு இருந்தது. அதனால் காவல்துறைத் தலைவரும் அவர்களைப் பின்பற்றினார்.  ஆனால் பின்னர் வந்த அரசாங்கம் - வெறும் கொல்லைப்புற அரசாங்கம் மட்டும் அல்ல, ஊழலுக்குப் பேர் போனவர்களைக் கொண்ட அரசாங்கம் - இவர்கள்  நீதி, நியாயம் பற்றி கவலைப்படாதவர்கள்! அதனால் காவல்துறைத்  தலைவரும் இவர்களைப் பின்பற்ற வேண்டிய அவலம்!

இப்போது நமக்கு என்ன தெரிகிறது!  காவல்துறைத் தலைவரின் பதவி என்பது மிகவும் வலிமை மிக்க ஒரு பதவி. ஆனால் ஊழலையே தொழிலாகக் கொண்ட ஓர் அரசியல்வாதியால் அவரையும் கட்டுப்படுத்த முடியும்! அது தான் நடக்கிறது!

அரசியல் அதிகாரம் என்பது வலிமைமிக்கது என்பது மீண்டும்  மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது!

தேர்தல் என்று வரும் போது நமது வலிமைய நாம் காட்டுவோம்!

No comments:

Post a Comment