Saturday 19 December 2020

நான் தயார்!

 நேரங்காலம் கூடி வந்தால் எல்லாமே சுபமாகத்தான் இருக்கும்!

அதுவும் இப்போது அரசியல்வாதிகளுக்கு மிக மிக நல்ல நேரம்.  அவர்கள் ஏன் கொல்லைப்புற அரசாங்கத்திற்குத் தங்களது முழு விசுவாசத்தையும், ஆதரவையும்  கொடுத்தார்கள், கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்  என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும் இப்போது நாம் அதனைப் பார்த்தும் இரசித்தும் கொண்டிருக்கிறோம்! அதைத்தான் நாம் செய்ய முடியும். வேறு என்ன செய்ய முடியும்?

அரியதொரு  வாய்ப்பை இழந்து விட்டோம். "வாராத வந்த மாமணி" என்று நினைத்தோம்.  ஆனால் மாமணி வந்தும்,  மகாதிராக மறைந்து போனது! என்ன செய்ய!

இது புலம்பல் அல்ல ஏதோ வயிற்றெரிச்சல் போல் தோன்றுகிறது அல்லவா! உண்மை தான்! கோடிக்கணக்கில்  ஊழல் செய்தவன்(ள்) எல்லாம்  இப்போது தலை நிமிர்ந்து நிற்கிறான்! நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நடக்கிறான்! இப்போது அவன் ஊழல் பேர்வழி அல்ல! ஊழல் செய்தவன் தியாகி ஆகி விட்டான்! நாட்டுக்காக போராடும் போராளி ஆகிவிட்டான்!

"என் மீது வழக்கா? ஓ! நான் தயார்! என்கிறான் தைரியத்தோடு! சமீபத்தில்  ஓர் ஊழல்வாதி விடுதலை ஆகிவிட்டார்! பக்காத்தான் அரசாங்கத்தில் இது நடக்குமா என்று நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது!

இப்போது இந்த ஊழல்வாதிகள் எல்லாம் கொள்ளையடித்தவர்கள் பட்டியலில் வரப்போவதில்லை. இவர்கள் எல்லாம் நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் பட்டியலில் வருவார்கள். இறந்தால் அரசாங்க மரியாதையோடு அடக்கம் செய்யப்படுவார்கள்!

உலக மகா திருடர்கள் என்று ஒரு சிலரைப் பற்றி நாம் கணித்து வைத்திருந்தோம். போகிற போக்கைப் பார்த்தால் அந்த மகா மகா வெல்லாம் இனி பலிக்காது என்றே தோன்றுகிறது! வெகு விரைவில் கையைத்  தூக்கி அசைத்து "ஹை! ஹை!" என்று நமக்கு "பை! பை!" காட்டிவிட்டுச் செல்வதைப் பார்க்கலாம்! அந்த அளவுக்கு நாடு மாறிவிட்டது!

கொல்லைப்புற அரசாங்கம் என்று சொன்னோம். அதிகபட்சமாக ஒரு இரண்டு பேரை வைத்துக் கொண்டு அரசாங்கம்  தள்ளாடுகிறது, சீக்கிரம் கவிழ்ந்துவிடும் என்று சொன்னோம் ஒன்றும் நடக்கவில்லை!

இப்போது ஒன்று தெளிவாகப் புரிகிறது. அனைத்து ஊழல்வாதிகளின் வழக்குகள் முடிந்த பிறகு, விடுதலையான பிறகு,  ஒரு வேளை அரசாங்கம் கவிழலாம்! அதுவரை அந்த வாய்ப்பில்லை!

அதுவரை "நான் தயார்!" என்று அவர்கள் மார்தட்டுவார்கள்! நாம் பார்த்து பரவசமடைவோம்!


No comments:

Post a Comment