Saturday 5 December 2020

தேவை எல்லாம் ஆர்வம் மட்டுமே!

 எந்தத் துறையில் நமக்கு ஆர்வம் இருக்கிறதோ அந்தத் துறை தான் நமக்கு முன்னேற்றத்தைக் கொண்டு வரும்.

இப்போது நம் முன்னே உள்ள எடுத்துக்காட்டு: இந்தியாவின்,  இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன் என்னும் பெயர் கொண்ட தமிழக இளைஞர்.

முதலில் ஒன்றைச் சொல்லி விடுகிறேன். எனக்கும் கிரிகெட்டுக்கும் வெகு தூரம்.    அது பற்றி நான் ஒன்றும் அறிந்திருக்கவில்லை! கடந்து சில தினங்களாக நடராஜன் என்னும் பெயர் அடிபட்டதால் அந்த நடராஜனைப் பற்றித் தெரிந்து கொள்ள கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன்.


மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர் நடராஜன்.  நடை பாதையில் ஒரு சிறிய பத்துக்கு பத்து  சிமெண்ட் அட்டை வீடு. வீட்டு முன்னே  ஓரு  சிறிய கடை அப்பா இன்றும் கூலி நெசவாளி. அம்மா அவருடைய கறிக்கடையில் கோழிகளுக்குச் சில்லி போட்டு விற்பனை செய்பவர். பதினைந்து ஆண்டுகள் நல்லதொரு சாப்பாடு சாப்பிடாத  குடும்பம்.  ரேஷன் கடை அரிசி, ரேஷன் கடை எண்ணைய். இதுவே போதும் நடராஜனின் வறுமையைப் புரிந்து  கொள்ள.

பண்ணிரெண்டாம் வகுப்பு வரை தான் அவர்களால் படிக்க வைக்க முடிந்தது.  அது இலவச கல்வி. அதன் பின்னர் நடராஜனின் நண்பர் ஜெய்பிரகாஷ் தான் அவருக்கு  வழிகாட்டியாகவும், கல்லூரி வரையிலும் படிக்க வைத்திருக்கிறார்.

ஒரு முறை அவருடைய கை எலும்பு முறிவு ஏற்பட்டும் கூட அவர் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தவில்லை. விளையாடுவதற்குத் தேவையான சப்பாத்தும்  இல்லாத நிலை.அப்படி இருந்தும்  அத்துணை ஆர்வத்தையும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் காட்டியிருக்கிறார். அவரது குடும்பத்தினர் அவரது கிரிக்கெட் ஆர்வத்துக்கு என்றும் தடையாய் இருந்ததில்லை. அத்தனை கஷ்டத்திலும் அவரை வேலை செய்து சம்பாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவுமில்லை.

அவர்கள் வறுமையில் வாடியபோது அவர்களை ஊரார் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ஆனால் இன்று அவர்களாகவே வந்து பேசுகிறார்கள் என்கிறார் அவரின் தாயார் சாந்தா!  உங்கள் மகன் தானா என்று கேட்கிறார்களாம்! பெருமையாய்  இருக்கிறது என்கிறார்!

நாம் வறுமையில் பிறக்கலாம். ஆனால் அதனை நம்மால் மாற்றியமைக்க முடியும் என்பது தான் நடராஜனின்  வாழ்க்கை சொல்லுகின்ற பாடம்.

விளையாட்டுத் துறையில், மிக ஏழ்மை நிலையில் இருந்த பலர், தங்களது திறமையின் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அதில் பி.டி.உஷா நமக்கு மிகவும் அறிமுகமானவர்.  கேரள மாநிலத்தவர். தையல் கடை வைத்து பிழைப்பு நடத்தியவர் தந்தை.  ஆசிய தடகள போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்தவர். வறுமையின் பிடியிலிருந்து அவர் குடும்பத்தை மீட்டு விட்டார்.

அடுத்து மேரி கோம் பற்றி சொல்லலாம். குத்துச்சண்டை வீராங்கனை. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.   விவசாய குடும்பம்.  நிலங்களில் கூலி வேலை.  குத்துச்சண்டை பின்னணி இல்லாதவர். ஆனால் குத்துச் சண்டையில் அவர் பல தங்கப்பதக்கங்களை வெற்றி கொண்டவர். இன்று வெற்றி வீராங்கனையாக உலா வருகிறார்.

இப்படி பல உண்மைச் சம்பவங்கள் அனுதினமும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. ஏழ்மையில் பிறக்கலாம். ஆனால் அதனை மாற்றியமைப்பது என்பது நம்மால் முடியும்.

நடராஜன் இன்னும் பல சிறப்புக்களைப் பெற்று தமிழர்களுக்கும்   நாட்டுக்கும் வீட்டுக்கும்  பெருமை சேர்க்க  வேண்டும். வாழ்க வளமுடன்!

நன்றி: பிபிசி


No comments:

Post a Comment