ஆமாம்! அரசியல்வாதிகளுக்கு நல்லதொரு அறிவுரை!
ஆனால் அரசியல்வாதிகள் எதைச் சொன்னாலும் காதில் ஏற்றிக் கொள்ளும் பரம்பரை இல்லை! சும்மா திஷூ பேப்பரில் துடைத்து வீசிவிட்டு போகும் ஒரு அரிய வகை மனித இனம்!
இந்த முறை பேராக் மாநில சுல்தான் நஸ்ரின் ஷா அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்! புதிய மந்திரி பெசார் நியமனத்தின் போது இந்த அறிவுரை அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது!
தேர்தல் முடிந்த பின்னர் இப்போது மூன்றாவது மந்திரி பெசார் நியமனமாகியிருக்கிறார்! என்னடா சோதனை? மாநிலத்திற்கு வந்த சோதனை! என்று சுல்தான் நினைக்கத் தான் செய்வார்! ஒரு நிலையான அரசு இல்லையென்றால் மாநில மேம்பாடுகள் தடைப்படத்தான் செய்யும். எந்த வேலையும் சுமுகமாக நடை பெறாது.
ஆனால் சுல்தான் கொடுத்த அறிவுரையை இவர்கள் ஏற்பார்களா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பதவி என்று வரும் போது அனைத்தும் மறக்கப்பட்டு விடும். நான் பெரியவனா, நீ பெரியவனா என்று கயிறு இழுக்கும் போட்டி மீண்டும் ஆரம்பித்து விடும்!
பதவிக்காக இவர்கள் எத்தனை முறையானாலும் சுல்தானை சந்திக்க சலிக்கமாட்டார்கள்! ஆனால் அவர் சொல்லுவதைக் காது கொடுத்து கேட்பார்களா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி!
ஆனாலும் அவர் கொடுத்த அறிவுரைக்கு இந்த முறை கொஞ்சமாவது மரியாதை இருக்கும் என நம்பலாம்!
காரணம் மீண்டும் நமபிக்கயில்லா தீர்மானம் கொண்டு வந்து, மீண்டும் அரசாங்கம் கவிழ்ந்து, மீண்டும் சுல்தானின் இஸ்தானாவுக்குப் படையெடுப்பது என்பது கொஞ்சமாவது வெட்கம் வரத்தான் செய்யும்! ஆனால் வெட்கம் எங்கு வருமோ அங்கெல்லாம் மரத்துப் போய்விட்ட பிறகு இவர்களுக்கு எதுவும் உறைக்காது!
சுல்தானும் இவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் காரணம் தனது குடிமகன்களாயிற்றே! தவறு செய்யும் குடிகளை மன்னிகத்தானே வேண்டும்! வேறு என்ன செய்வது?
ஆயினும், மாநில சுல்தான் சொல்லியதை மனத்தில் இறுத்தி அவர்கள் சுயபுத்தியோடு செயல் படுவார்கள் என நம்புவோம்!
அரசியல் என்பது விளையாட்டுக்களம் அல்ல, விளையாட்டாய் எடுத்துக் கொள்ளுவதற்கு! இது மக்களின் உரிமை. மக்களின் வாழ்வாதாரம். மக்களின் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும். களையப்பட வேண்டும்.
இப்போது கொரொனா தொற்று நோயினால் மக்கள் பல வழிகளில் பலவீனம் அடைந்திருக்கிறார்கள். அவர்கள் வாழ வழி காட்ட வேண்டும். இந்த நேரத்திலும் பதவி, பணம் என்கிற நோக்கிலேயே அரசியல்வாதிகள் அலைந்து கொண்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அரசியல்வாதிகளே! நீங்கள் செய்வது யாருக்கும் பெருமை தர்ப்போவதில்லை! கேவலத்தைத் தான் உண்டாக்கும்!
மேன்மைதங்கிய சுல்தான் கூறுவது போல "இது ஒன்றும் பெருமை தரும் விஷயமல்ல!"
No comments:
Post a Comment