Tuesday 8 December 2020

பன்றிக்கு வந்த யோகம்!

 


ஆமை புகுந்த வீடும் அமினா நுழைந்த  வீடும் விளங்காது என்பார்கள்.

ஆனால் இப்போது காட்டுப்பன்றி ஒன்று பேரங்காடி ஒன்றில் வலம் வந்து கொண்டிருந்ததைக் கண்டு பலர் ஆச்சரியமுற்றனர்; பலர் அச்சமுற்றனர்!

ஆமை வீட்டுக்கு ஆகாது! பன்றி? அதுவும் நாட்டின் நிர்வாகத் தலநகரான புத்ரா ஜெயாவில்! ஆகும் என்றே எடுத்துக் கொள்ளுவோம்!

நமக்கும் ஆச்சரியம் தான்.  மனிதர்களுக்காக பேரங்காடியா அல்லது மிருங்களுக்காக பேரங்காடியா என்கிற எண்ணம் வரத்தான் செய்யும்! ஆனால் அது தற்செயல்.  யார் மீதும் குற்றம் இல்லை.

பன்றிகளைப் பற்றி பேசும் போது நமக்குத் தெரிந்ததெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாட்டில் வந்த பன்றிக் காய்ச்சல். ஜேயி என்று சொல்லப்பட்ட அந்தக் காய்ச்சலின் மூலம் பலர் அந்த நோயினால் இறந்திருக்கின்றனர்.

இப்போதும் நம் நாட்டில் 600 க்கும் மேற்பட்ட பன்றிப்பண்ணைகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. சுமார் பதினைந்து இலட்சம் பன்றிகள்  வளர்க்கப்படுகின்றன. எல்லாம் உணவுக்காகத் தான்!

பன்றிப் பண்ணைகள் வைத்து பெரும் பணக்காரர்களான தமிழர்களும் இங்கு உண்டு. இன்றும் இருக்கின்றனர்.

ஆனால் காட்டுப்பன்றிகள் நிலை வேறு. அது வளர்க்கப்படுவதில்லை.  அதுவே காடுகளில் வளர்கின்றன.  காடுகளில் உணவுகள் இல்லையென்றால் தான் நாட்டுக்குள் வருகின்றன!  என்ன செய்வது? எல்லாப் வயிற்றுப்பாட்டுக்குத்தான்!

நமது நாட்டில் புலி,  காட்டுப்பன்றி இன்னும் பல விலங்குகள் அனைத்தும் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட விலங்குகளின் சட்டத்தின் கீழ் வந்தாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பன்றிகள் வேட்டையாடுவது அனுமதிக்கப்படுகின்றது. வேட்டையாடப்படுகின்றது என்றால் மனிதர்களின் உணவுக்காகத்தான்! நமது உணவுக்காக மட்டும் அல்ல காடுகளில் வாழும் புலிகளுக்கும் அவை முக்கியமான உணவாகவும் விளங்குகின்றது!

எப்படியோ இந்தக்காட்டுப்பன்றி,  கொஞ்ச நேரத்திற்குப் பேரங்காடியைவச் சுற்றித் திரியும்   யோகம் அடித்திருக்கிறது. நமக்குத் தான் ஊரடங்கு; சுற்றித்திரியும் மிருகத்திற்கு என்ன ஊரடங்கு! ஆனால் பாவம்! இந்நேரம் அது போய்ச் சேர்ந்திருக்கும்.  மனிதனுக்கு,  மனிதன் மேலேயே  பாசம், பற்று, அன்பு இல்லை! மிருகத்திடமா அன்பைக்  காட்டுவான்!

பன்றிக்கு இது யோகமா?  ஊகும்! இது சோகம்!

No comments:

Post a Comment