Sunday 13 December 2020

ஜாவி மொழி போதனை தேவையா?

தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி மொழி போதனை தேவயான ஒன்றா என்கிற விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது.

கல்வி அமைச்சு இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கான காரணம் என்ன என்பது அவர்களுக்கும் புரியவில்லை, நமக்கும் புரியவில்லை!

ஜாவி மொழியை  வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்விக்கு எந்தப்  பதிலும் இல்லை!

ஜாவி தான் தேசிய மொழி என்றால் அதனை யாரும் எதிர்க்கப் போவதில்லை. ஆனால் நமக்கென்று ஒரு தேசிய மொழி இருக்கின்ற போது இன்னொரு, தேவையற்ற, அந்நிய மொழியைக் கற்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வி எழத்தான் செய்யும்.

தேசிய மொழியில்  தமிழ்ப்பள்ளிகள்  இன்னும் சிறப்பான முறையில் தேர்ச்சி பெற முயற்சிகள் நடைப் பெற்றுக்கொண்டிருக்கும் போது ஜாவி மொழியைக் கொண்டு வந்து திணிப்பது யாருக்கு என்ன பயன் என்பது புரியாத புதிராக இருக்கத்தான் செய்யும்.

இவ்வளவு பிடிவாதம் காட்டும் கல்வி அமைச்சு, முதலில் தங்களது அலுவலகத்தில்  வேலை செய்யும் பணியாளர்களில் எத்தனை பேர் ஜாவி மொழியை  அறிந்திருக்கிறார்கள் என்பதைச் சொல்ல முடியுமா? அங்கும் அந்த மொழியை அறிந்தவர்கள் பூஜ்யமாகத் தான் இருக்கும்! ஏதோ ஓரிருவர் அறிந்திருக்கலாம்!

ஜாவி மொழிக்கு நாம் எதிரியல்ல. அது போல எந்த மொழிக்கும் நாம் எதிரியல்ல. இன்றைய நிலையில் மட்டும் அல்ல எல்லாக் காலங்களிலும் நாட்டின் தேசிய மொழிக்குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறோம். அது தான் நாட்டின் அதிகாரத்துவ மொழி.  அரசாங்க மொழி. அரசாங்கத்தின் தொடர்பு மொழி.

ஆக, தேசிய மொழியின் மீது எந்த ஒரு மாற்றமுமில்லை. அப்படி மாற வாய்ப்புமில்லை. 

நாட்டின் மொழிக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியே தான் இருக்கின்றது.

எந்த மாற்றமும் இல்லாத சூழலில் இப்போது ஏன் இந்த ஜாவி திணிப்பு என்பது இயற்கையாகவே வரத்தான் செய்யும்.

ஏற்கனவே தமிழ் மொழியின் போதனை நேரம் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படும் சூழலில் இப்போது இன்னொரு மொழியை வலுகட்டாயமாகக் கொண்டு வந்து திணிப்பதன் மூலம் இவர்கள் என்னத்தைச் சாதிக்கப் போகிறார்கள்? தமிழ்ப்பள்ளிகளின்  அடையாளத்தையே அழிப்பதாகத் தான் நாம் நினைக்க வேண்டி வரும். அது பற்றி நாம் நிச்சயமாகக் கவலை கொள்கிறோம்.

இன்றைய நமது பிரச்சனைகள் எல்லாம் அரசியல்வாதிகளால் வருகின்றவை. கல்வியாளர்களால் அல்ல!  அரசியலில் உள்ளவர்கள் எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதை   நம்மால் ஒன்றும் செய்ய  முடியவில்லை.

மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய சூழலில் இப்படி மாற்றங்களைக் கொண்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்பதைத் தவிர நம்மால் வேறு ஒன்றையும் சொல்ல முடியவில்லை.

காவி மொழி தேவை இல்லை என்பதே நமது நிலை!

No comments:

Post a Comment