Friday 2 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (19)

சிறிய அளவில் செய்வது பாதுகாப்பாக இருக்கும்!

தொழிலை ஆரம்பிக்கும் காலக்கட்டத்தில்  முடிந்தவரை முதலீடுகளைக் குறைத்துக் கொள்வது பாதுகாப்பாக இருக்கும். அதுவும் முதல் தலைமுறையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இது பணம் சம்பந்தப்பட்டது. இருக்கிறதையெல்லாம் அள்ளிப் போட்டு விட முடியாது. இது அனுபவம் இல்லாதவருக்குக் கொடுக்கின்ற எச்சரிக்கை. அனுபவம் உள்ளவர்கள், தங்கள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் - இவர்களெல்லாம் விதிவிலக்குகள். எது நேர்ந்தாலும் இவர்களால் எதிர் நோக்க முடியும்.

தொழிலைச் செய்து கொண்டே அனுபவத்தைப்  பெறுபவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி பயம் இல்லை. அவர்களிடம் எச்சரிக்கை உணர்வு இருக்கும்.

எப்படிப் பார்த்தாலும் முதன் முதலில் தொழிலில் ஈடுபடுபவர்கள்  முதலீடுகளை முடிந்தவரை சுருக்கிக் கொள்ள வேண்டும். அதுவே நலம் பயக்கும்.

இன்னொன்றை  நாம் குறிப்பிட வேண்டும். பணம் உங்கள் கையில் இருப்பில் அல்லது வங்கியில் இருக்கிறது என்கிற ஒரு விஷயமே உங்களை எதுவும் பயமுறுத்தாது.  தொழிலில் மேடு பள்ளம் இருந்தாலும் அந்த இருப்பு உங்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். முடிந்தவரை கையிருப்பில் கை வைக்காமல் வருகின்ற வருமானத்தில் தொழிலை நடத்துவது என்பதே சிறப்பு.

தொழிலில் அனுபவம் கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கை வந்துவிட்டால்,  தொழிலை மேலும் வளர்ச்சி பெற செய்ய  வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால், கடன் பெற முயற்சி செய்யுங்கள். வங்கியில் கடன் அல்லது அரசாங்க அமைப்புக்களிலிருந்து கடன் பெறுவது எல்லாம் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் உங்கள் இருப்பில் உள்ள பணத்தில் மட்டும் கைவைக்காதீர்கள். அது உங்களுக்கு ஒரு பாதுகாப்பு.

ஒரு சீன இளைஞனை எனக்குத் தெரியும்.  கைபேசி தொழிலில் ஈடுபட்டிருந்தான். பணம் பற்றாக்குறை. கடன் அட்டைக்கு விண்ணப்பித்து அதுவும் கிடைத்தது. எவ்வளவு பணம் எடுக்க முடியுமோ அவ்வளவு பணத்தையும் எடுத்து தொழிலில் முதலீடு செய்தான். கடனுக்கான பணத்தையும் வட்டியையும்  கட்டி வந்தான். பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்!

இதனை ஏன் சொல்லுகிறேன் என்றால் சீனர்களுக்குத் தொழில் என்பது பிழைப்பு. இந்தியர்களுக்கு அது இன்னும் முழுமையான பிழைப்பாக கொண்டு வர முடியவில்லை!

கையில் இருப்பு என்பது ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. அதுவும் முதல் தலைமுறையினருக்குப் பாதுகாப்பு உணர்வு தேவை.

வெற்றி பெறுவோம்!



 குறைத்துக்

No comments:

Post a Comment