Friday 23 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (37)

அதிர்ஷ்டம் என்று ஒன்றுமில்லை!

பொதுவாக ஒருவர் தனது தொழிலில் வளர்ந்து விட்டால் அல்லது வெற்றி பெற்று விட்டால் அவரை அதிர்ஷ்டசாலி என்று சொல்லுவது சோம்பேறிகளின் வாடிக்கை!

இன்று நாம் அவரை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அவர் ஆரம்ப காலத்தில் பட்ட சிரமங்கள், அவமானங்கள் - இது பற்றி எல்லாம் நாம் கவலைப்படுவதில்லை. 

வெற்றி என்பதெல்லாம் சும்மா வருவதில்லை.  கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்குப் போவது  என்பது நாம் நினைப்பது போல அவ்வளவு எளிதான காரிய அல்ல.  அது எளிது என்பதாக வெற்றி பெற்ற யாரும் சொல்லுவதில்லை.  மேலே போவதற்கு ஒவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். மூன்று நான்கு படிகளைக் குதித்துக் குதித்து தாண்டி ஏற முடியாது!

ஆனால் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத வெளியே உள்ளவர்கள் ஏதோ அதிர்ஷ்டம் வந்து அவர்களை அணைத்துக் கொண்டது போலவும் அதனால் தான் இன்று பெரிய பணக்காரர் ஆகிவிட்டார்கள் என்பது போலவும் மிகச் சாதாரணமாக பேசிக் கொள்ளுவது வேடிக்கை என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டம் நம்மை அணைக்க வேண்டுமானால் நாம் அதற்காக உழைக்க வேண்டும். ஆம், உழைப்பு தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். சிந்தும் வேர்வைத் துளிகள்  தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். பெறுகின்ற அவமானங்கள் தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

வெறுமனே உட்கார்ந்து கொண்டு அதிர்ஷ்டம் நம்மைத் தேடி வரும் என்றால் அப்படியெல்லாம் எதுவும் வருவதில்லை!  உட்கார்ந்து கொண்டு, வெட்டிக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தால்,   அதிர்ஷ்டம் வரும் என்று காத்திருந்தால், வருவது வறுமையாகத் தான் இருக்கும்!

அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று எத்தனையோ முறை, நான்கு நம்பர், ஐந்து நம்பர், ஆறு நம்பர், டோட்டோ, மேக்னம் என்று ஒன்று விடாமல் எடுத்தும் எந்த அதிர்ஷ்டமும் இல்லாத போது  தொழில் செய்பவர்களுக்கு எப்படி, எங்கிருந்து அதிர்ஷ்டம் வரும்? அதிர்ஷ்டம் என்பது சும்மா வருவதில்லை. அதற்காக உழைக்க வேண்டும். வேர்வை சிந்த வேண்டும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆகவே அதிகமாக அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள். மாறாக உழைப்புத் தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று நம்புங்கள். உழைப்பைக் கொட்டுங்கள். அதிர்ஷ்டம் வரும்.

No comments:

Post a Comment