Thursday 1 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (18)

சிறு தொழில்கள் செழிக்க வேண்டும்!

                                    இந்திய இளம் தொழில் முனைவர் மாநாடு

தொழில், யார் வேண்டுமானாலும் செய்யலாம். வயது வித்தியாசம் இல்லை. ஏழை பணக்காரர் இல்லை.

யாருக்குத் துணிச்சல் இருக்கிறதோ அவர்கள் தொழில் செய்யலாம். முக்கியத் தேவை என்பது துணிச்சல் தான்.

முதலீடு என்பது தானே முக்கியம் என்று  சொன்னாலும் அதற்கும் துணிச்சல் தான் தேவை. கையில் காசு இல்லை அவர் எப்படி தொழில் செய்ய முடியும்?

அதற்கும் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்! இன்றும் அது நடந்து கொண்டிருக்கிறது என்பது தான் விசேஷம்! 

காலையில் கடன் வாங்குவார்கள். தேவையான பொருள்களை  வாங்குவார்கள்.  வாங்கிய பொருள்களை விற்பனை செய்வார்கள். அதாவது இலாபத்திற்கு விற்பார்கள். அன்று மாலை வட்டியோடு கடனை அடைப்பார்கள். அடுத்த நாள் காலை மீண்டும் கடன், மாலை கடனடைத்து இலாபத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் அடுத்து நாள் அதே நடைமுறை.

இப்படி வியாபாரம் செய்பவர்கள் ஆயிரக்கணக்கில் நம்மிடையே இருக்கிறார்கள். இப்படியே தொழில் செய்து வெற்றிகரமான  முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள். கையில் துட்டு வந்ததும் அவர்களே பிறருக்குப் கடன் கொடுப்பார்கள்! வேண்டியதெல்லாம் அசாத்தியமான துணிச்சல்!

சிறு தொழில் செய்பவர்கள் அதுவும் அன்றாடம் வட்டிக்கு வாங்கி வியாபாரம் செய்யும் இவர்களுக்குத் துணிச்சலைத் தவிர வேறு என்ன முதலீடு தேவை.

எப்படியெல்லாம் வியாபாரம் செய்கிறார்கள், எப்படியெல்லாம் முதலீடுகளைப் பெறுகிறார்கள் என்பதை நோக்கினால் நாம் மலைத்துப் போவோம்!

துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்பார்கள். வியாபாரம் செய்வதே ஒரு துணிச்சல் தான். அதுவும்  கையில் காசில்லாமல் வட்டிக்குக் கடன் வாங்கி வியாபாரம் செய்கிறார்களே இவர்களின் துணிச்சலை யாருடன் ஒப்பிடுவது?

ஆக, எல்லாவற்றுக்கும் ஒரு வழி இருக்கின்றது. அதையெல்லாம் நமக்கு முன்பே கண்டுபிடித்து விட்டார்கள்! காசும் பார்த்து விட்டார்கள்! பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்!

ஏற்கனவே கவியரசு கண்ணதாசன் பாடிவிட்டுப் போயிருப்பதை ஞாபகப்படுத்துவதா? "வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்!" அது போதுமே!  இன்னும் வேண்டுமென்றால் "துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை!" என்பதையும்  சேர்த்துக் கொள்ளுங்கள்!

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இன்று சிறு தொழில் செய்பவர்கள் தான் நாளை பெரும் தொழில்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அதற்கான துணிச்சல் அவர்களிடம் உண்டு. பயிற்சி உண்டு. பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஆற்றல் அவர்களிடம் உண்டு.

சிறு தொழில்கள் செழிக்க வேண்டும். சீனர்கள் ஏன் சிறு தொழில்களைக் கூட விட்டுவைப்பதில்லை? அதிலுள்ள வருமானம் தான். ஓர் அலுவலகத்தில் வேலை செய்பவரின் வருமானத்தையும் ஒரு சிறு தொழில் செய்யும் வியாபாரியின் வருமானத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். யார் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்பது புரியும்.

சிறுசோ பெருசோ வியாபாரத்திற்கு ஈடு இணை இல்லை!


No comments:

Post a Comment