Wednesday 28 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (43)

 தோல்வி என்பது மிகப்பெரிய வாய்ப்பு!

தோல்வி என்பது மிகப்பெரிய வாய்ப்பு என்பது தான் நமது புரிதலாக இருக்க வேண்டும்.

தோல்வி என்றதும் "கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்"  என்கிற  மாதிரி சிலர் ஒடுங்கி, அடங்கி விடுவர்.  கடன் பட்டவர்கள் கலங்குவது என்பது இயல்பு தான். காரணம் கடனைப் போல கலங்க வைப்பது வேறு எதுவும் இல்லை.

வர்த்தகத்தில் தோல்வி என்பது பொருளாதாரம் தான். கடன் படுவது தான். கடன்பட்டால் நெஞ்சம் கலங்கும் தான். கடன் நம்மை ஒடுக்கி விடும் என்பது உண்மை தான்.  எல்லாருக்கும் அந்த அனுபவம் உண்டு.  நமக்கும் அந்த அனுபவம் உண்டு. அதனால் கடன் படுவது என்பது வர்த்தகத்தில் இயல்பான ஒன்று.  ஆனால் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமானது!

ஆக தோல்வி என்பதே பொருளாதாரத் தோல்வி தான்.  அதனை எப்படி அணுகலாம் என்பது தான் நமது நோக்கம். எல்லாமே அனுபவத்தின் அடிப்படையில் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த சில அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம்.

கடன் என்றதும் முதலில் நம்மிடம் உள்ள பயத்தைப் போக்க வேண்டும். இங்கு பயம் தேவை இல்லை.  பயத்தைக் களைவது தான் நமது முதல் வேலை. அடுத்து நாம் யாரிடம் கடன்பட்டிருக்கிறோமோ அவர்களிடம் உட்கார்ந்து பேச ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.  இங்கு "நீ பெரியவனா, நான் பெரியவனா?"  என்கிற  பாகுபடுகள் தேவை இல்லை. இரண்டு பேருமே பெரியவர்கள் தான்! ஆனால் கடன்பட்டவர் தன்னைத் தானே சிறியவர் ஆக்கிக் கொள்வது என்பது இயல்பு!  அது தவிர்க்க முடியாதது!

நாம் செய்ய வேண்டியதெல்லாம் உட்கார்ந்து பேசி நாம் அவர்களின் கடனை எப்படி அடைக்கைப் போகிறோம் என்கிற நமது பரிந்துரையை அவர்கள் முன் வைக்க வேண்டும். நம்மிடம் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் அவர்களிடம் போய் வெறும் வாய்மொழியாக எதனை வேண்டுமானாலும் கூறலாம். அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். கடிதம் மூலமாக செய்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ள சாத்தியங்கள் உண்டு. அதில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால் அது பற்றி விவாதித்து மாற்றங்கள் செய்யலாம். எல்லாவற்றுக்குமே சாத்தியங்கள் உண்டு.

முக்கியமாக நமது கடன் பிரச்சனைகளை இப்படி அணுகுவது பயனாக இருக்கும். பயந்து ஓடுவது பயன் தராது! அவர்களைப் பார்த்து நடுங்குவது பயன் தராது! நாம் தவறு செய்யவில்லை. சில நிர்வாகக் குளறுபடியால் தவறுகள் நேர்ந்து விட்டன. அதனை உட்கார்ந்து பேசி நாம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

தவறுகள் நேர்வது எல்லாக் காலங்கிலும் உண்டு. ஒன்றும் புதிதல்ல. நமக்கு அது புதிதாக இருக்கலாம்.

தோல்வி என்பதை ஒரு வாய்ப்பாக  எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் நாம் படிக்க வேண்டியது நிறையவே உண்டு. முறையான ஒரு நிர்வாகத்தை நடத்துவதற்கு நமக்குத் தோல்விகள் தேவைப்படுகின்றன. தோல்விகள் என்றதுமே அச்ச உணர்வு தேவை இல்லை. அவைகளை எப்படி சரி செய்வது என்பது தான் முக்கியம்.

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment