Friday 9 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (25)

சுதந்திரம் என்பது தான் தொழில்!

நீங்கள் என்ன தான் பெரிய சம்பளம் வாங்கி பெரியதொரு நிறுவனத்தில் பதவியில் இருந்தாலும் உங்களுடைய நிலை என்ன?

முதலில் நீங்கள் சுதந்திரமாக இயங்க முடியாது!  உங்களுக்கு மேலே ஒருவன், அவருக்கு மேலே ஒருவன் - இந்த அடுக்கு இப்படித்தான் போய்க் கொண்டிருக்கும்! முடிந்ததெல்லாம் ஏதோ கீழ்மட்ட அப்பாவி ஒருவனை ஆட்டிப் படைக்க முடியும். அதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது!

ஒரு சிறு வியாபாரியாக இருந்தாலும் அவனுடைய நிலை என்ன? நிச்சயமாக அவன் உங்களை விட சுதந்திரமாக இயங்குகிறான்! அவன் எடுக்கும் முடிவு அவனுடையது. யாரும் அவனைக் கட்டுப்படுத்த முடியாது! இரவல் மூளையை அவன் கடன் வாங்கவில்லை! நல்லதோ, கெட்டதோ அவனுடைய முடிவு அவனுடையது!

இது தான் வியாபாரத்திற்கும் வேலை செய்வதற்கும் உள்ள வித்தியாசம்.

இங்கு நாம் வெறும் சுதந்திரத்தை மட்டும் பேசவில்லை. அந்த சிறு வியாபாரம் செய்கின்ற ஒருவர் நாளையே தனது தொழிலை பெரியதொரு வியாபாரமாக மாற்றி அமைக்க முடியும். அது அவருடைய முயற்சியைப் பொறுத்தது. இன்றைய ஒரு சிறிய வியாபாரி நாளையே நாடு போற்றும் பெரும் தொழில் அதிபராக மாற முடியும். அது அவருடைய உழைப்பு, எதிர்காலத் திட்டம் போன்றவை தீர்மானிக்கும்.

நாடு போற்றும் தொழில் அதிபர் டான்ஸ்ரீ வின்சன் டான் கையில் பணம் இல்லாத நிலையில் காப்புறுதி நிறுவனத்தில் ஒரு முகவராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அங்கு கிடைத்த வருமானத்தைக் கொண்டு உணவகத் தொழிலுக்கு மாறினார். அதன் பின்னர் பல மாறுதல்கள், பல முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கொண்டு இன்று இந்நாடு போற்றும் தொழில் அதிபராக தன்னை மாற்றிக் கொண்டார்.

இப்படி பிரமாண்டமான மாற்றங்கள் வியாபாரங்களில் ஈடுபட்டவர்களால் தான் கொண்டு வர முடியும். வேலை செய்பவர்களால் ஒரு போதும் இந்த உச்சத்தை எட்ட முடியாது. ஏர் ஏசியா,  டான்ஸ்ரீ டோனி ஃபர்னாண்டஸ்,  துணிந்து விமானத் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாதிருந்தால் அவர் தான் படித்த கணக்கியல் துறையோடு தான் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்! ஆனால் இன்று நாடு போற்றும் ஒரு தொழில் அதிபராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொழிலில் உங்களுக்குச் சுதந்திரமும் உண்டு. நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்கிற வழிகாட்டுதலும் உண்டு. சிறிய அளவிலும் உங்களை இணைத்துக் கொள்ளலாம். பெரிய அளவிலும் உங்களை வளர்த்துக் கொள்ளலாம். உங்களுக்குப் போதும் என்றால் நிறுத்திக் கொள்ளலாம்.  உங்கள் இலக்கை நீங்களே நிர்ணயித்தும்  கொள்ளலாம்.

இது தான் தொழில்!  சுற்றித்திரிய சுதந்திரமும் உண்டு!  சுற்றும்வரை சுகங்களும் உண்டு!

No comments:

Post a Comment