நமது வளர்ச்சிக்குத் தோல்விகள் தேவையே!
இந்த தொடரில் நான் அடிக்கடி தோல்விகளைப் பற்றி எழுதி வருகிறேன். எனக்கும் அதில் வருத்தம் தான்.
ஆனால் தோல்விகள் பற்றி நாம் நிறையவே தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குத் தடையாக இருப்பவை இந்த தோல்விகள் தான். ஒரு முறை தோல்வி என்றாலே உடனே மூட்டையைக் கட்டிக்கொண்டு ஓடிவிட நினைக்கிறோம். அப்படி செய்தது சரிதான் என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்!
நம் சொந்த பணத்தை முதலீடு செய்து ஆரம்பித்த தொழிலொன்று தோல்வியில் முடிந்தால் அது நமது மனத்தைப் பாதிக்கவே செய்யும். அது பெரிய பாதிப்பு என்பதில் ஐயமில்லை.
ஆனால் இங்கு நாம் சொல்ல வருவதெல்லாம் அந்த தோல்வி என்பது நிரந்தரம் அல்ல என்பது தான். அந்த தோல்வி நமக்கு ஒரு பாடத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அவ்வளவு தான். அதற்காக நமக்கு நிரந்தர தோல்வி அடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தொழிலே இனிமேல் வேண்டாம் என்று ஒதுங்க நினைப்பது மிகத் தவறாகும்.
தோல்விகள் என்பது எல்லாத் துறைகளிலும் உண்டு. ஆனால் தொழிலில் தோல்வி என்பது நாம் சேர்த்து வைத்திருந்த நமது சொந்தப் பணம் காலியாகிறதே என்கிற பயத்தில் தான் அதிகமாக வருகிறது.
தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை என்பதை நாம் முதலில் உணர வேண்டும். வாழ்க்கையில் நாம் பல வழிகளில் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் ஏதோ ஒரு வழியில் மற்றவர்களுடன் சமரசம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடர்கிறோம்!
ஆனால் தொழில் என்று வரும் போது மட்டும் நம்முடைய சிந்தனைகள் மாறி விடுகின்றன. காரணம் போட்ட பணம் வருமா என்கிற பயம் வந்து விடுகிறது! ஆனாலும் நாம் உறுதியோடு அந்த பயத்தை எதிர்த்து நிற்க வேண்டும். இப்போதும் தொழில் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்விகளைச் சந்திக்காமல் இல்லை. எல்லாம் சரியாகி விடும் என்கிற ஒரு மனநிலையை உருவாக்கிக் கொண்டு தான் செயல்படுகிறார்கள். துணிந்தவர்களுக்குத் துக்கமில்லை என்பது சரியான ஒரு பழமொழி. பயந்தவனுக்குப் பார்த்ததெல்லாம் பன்றிக்கூட்டம்!
ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகள் இல்லாமல் வெற்றிகள் இல்லை. அந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோல்விகளை வைத்துத் தான் நமது தொழிலில் சரியான பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். தோல்விகள் இல்லை என்றால் பாதை சரியாக அமைய வழியில்லை.
அதனால் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். துவண்டு போவதற்காக நாம் தொழில் செய்ய வரவில்லை! துணிந்து நின்று போராடி வெற்றி பெறவே தொழில் செய்ய வந்தோம்! அதனைக் கருத்தில் கொண்டு வெற்றி பெறுவோம். வெல்வோம்!
No comments:
Post a Comment