Wednesday 7 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (23)

 பாதுகாப்பு என்பது எந்த வேலையிலும் இல்லை!

பாதுகாப்பு என்பது நாம் செய்யும் எந்த வேலையிலும்  இல்லை என்பதை இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம். அதுவும் குறிப்பாக இந்த கோவிட்-19 தொற்று நோயின் காலத்தில் நாம் என்ன அவஸ்தைப்படுகிறோம் என்பதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஒருவர் விமான ஓட்டுனர் ஆக வேண்டும் என்றால் அதன் படிப்பு, அதன் செலவு என்பதெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் ஒரு இளைஞர் தொற்று நோய் காலத்தில் தற்கொலை செய்து கொண்டார். அதே வேலையில் இருந்த இன்னொரு மலாய் இளைஞர் சொந்தமாக சிறிய வணிகத்தில் ஈடுபட்டு பலகாரங்கள், மீ கோரெங் போன்றவற்றை விற்று தனக்கென ஒரு வழியைத் தேடிக் கொண்டார். விமானப் பணிப்பெண்ணாக இருந்த ஒருவர் வீட்டிலிருந்து கொண்டே கடைகளுக்குப் பலகாரங்கள் செய்து விற்பனை செய்து வருகிறார். நமது பெண்களில் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்து பத்தாய் காய், கீரை வகைகள்  போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். தேநீர் விற்கின்றனர். இன்னும் பல.

ஒர் உண்மையை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும். வேலையை இழக்கும் காலக் கட்டத்தில் சிறிய வணிகங்கள் நமக்கு அரணாக இருக்கும் என்கிற உண்மை இப்போதும் சரி எப்போதும் சரி நமக்குப் பாடத்தைப் புகுட்டுகின்றன என்பது நமக்குத் தெரிகிறது.

என்னைக் கேட்டால் இதுவே சரியான தருணம். இப்போது நீங்கள் செய்கின்ற சிறு வணிகங்கள் உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறதா? அப்படியென்றால் அதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை. தொடருங்கள். இன்னும் உங்களின் வருமானத்தைக் கூட்ட முயற்சி செய்யுங்கள்.

எப்போதும் ஒன்றை நினைவிற் கொள்ளுங்கள். ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதை விட இன்று நீங்கள் செய்கின்ற இந்த சிறு வணிகம் உங்களின் கௌரவத்தைக் கூட்டும்.  இன்னும் ஒரு படி மேலே போனால் அந்த தொழிற்சாலை முதலாளியின் ஒப்பிடும் அளவுக்கு நீங்களும் ஒரு தொழில் செய்கிறீர்கள் என்பது தான் உண்மை! ஒரே வித்தியாசம். அது பெரிய தொழில், இது சிறிய தொழில். ஆனால் ஆண்டுகள் கூடும் போது நீங்களும் அவர்கள் அளவுக்கு உயரலாம்! காரணம் அது தான் தொழில்! அது தான் வணிகம்! தொழில் உங்களை உயர்த்தும்!

அதனால் பாதுகாப்பு என்பது எந்த வேலையிலும் இல்லை. அப்படி பாதுகாப்பு இல்லையென்பதால் தான்  நாம் வேலை செய்கின்ற இடங்களில் போட்டி, பொறாமை, கோள்சொல்லுதல், காட்டிக்கொடுத்தல் - இவைகளெல்லாம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன! இதனால் என்ன ஆகிறது? மனநிம்மதி இல்லை. வேலையில் நாட்டம் செலுத்த முடிவதில்லை. மாதத் தவணைகளைக் கட்டியாக வேண்டுமே என்று தலையலடித்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக வேலையைத் தொடர வேண்டியுள்ளது.  ஆக வேலை செய்து பிழைப்பதிலும் அப்படி ஒன்றும் 'ஆகா, ஓகோ'  என்று சொல்லுவதற்கில்லை! 

முடிந்தவரை சிறு தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் அது நமது தொழில், நமது வருமானம், நமது சம்பாத்தியம், நாம் தான் முதலாளி என்கிற அந்த கௌரவம் நம்மைத் தலை நிமிர வைக்கும். மக்களிடையே நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும். எந்த நேரத்திலும் தொழிலை வளர்த்தெடுக்க முடியும்.

ஆக, வேலை செய்வது தான் பாதுகாப்பு என்கிற மாயையை உடைத்தெறிவோம்!

No comments:

Post a Comment