Sunday 25 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .........! (40)

தவறுகள் இல்லாமல் எப்படி? 

வாழ்க்கை என்றாலே தவறுகள் இருக்கத்தான் செய்யும். அது தொழில்களிலும் இருக்கும்.

தவறுகளே செய்யாமல் "நான் தொழில் செய்து பணக்காரன் ஆகிவிட்டேன்!"  என்று சொல்லக் கூடிய மனிதர்கள் யாருமில்லை! அப்படி சொன்னால் ஏதோ கோளாறு உள்ளவராக இருக்க வேண்டும் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்!

தவறுகள் செய்யாமல் மனிதன் வாழ முடியாது. அது இயற்கையின் நியதி. தவறுகள் செய்யாதவர்கள் இருக்கும் இடம் என்று ஒன்று உண்டு. அது தான் சுடுகாடு !  எல்லாத் தவறுகளையும் செய்துவிட்டு இப்போது தவறுகளே செய்யாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்!

ஆனால் தவறுகள் என்பது நமது வாழ்க்கைப் பயணத்தில்  மிகத் தேவையான ஒன்று. தவறுகள் என்பது நமக்குப் படிப்பினை. நெருப்பு என்று சொன்னால் குழந்தைகளுக்குப் புரியாது. ஒரு முறை அது என்ன என்று அனுபவித்துவிட்டால் அதன் பிறகு குழந்தை அங்கே தனது  கையைக் கொண்டு போகாது! எல்லாமே அது போலத் தான்.

தவறுகள் மட்டும்தான் நமது வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறது.

வணிகம் செய்யும் போது எத்தனையோ பாடங்களைப் போகிற போக்கில் நாம் கற்றுக் கொள்ளுகிறோம்.  ஒரே ஒரு பாடம் இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. கிள்ளானில் இருந்த வந்த புத்தக வியாபாரி ஒருவர் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வந்தார். புத்தகங்கள் விற்குமா என்கிற சந்தேகம் எனக்கிருந்தது.  அதனால் புத்தகங்கள் விற்றால் மட்டுமே பணம் தருவேன் என்பதாகச் சொல்லிவிட்டேன்.  ஒரு சில மாதங்கள் ஆன பின்னரும் அவர் ஆளையே காணோம்! நான் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விற்பனையான புத்தகங்கள் தவிர விற்பனையாகாத புத்தகங்களை மீட்டுக் கொள்ளும்படி சொல்லிவிட்டேன். ஆனால் அவர் நான் வாங்கிய புத்தகங்களுக்குப் பணம் தரவில்லை என்பதாக வழக்கறிஞர் மூலம் கடிதம் எழுதியிருந்தார்! தவறு அவர் மேல் ஆனால் அவரோ என்னைக் குற்றம் சாட்டுகிறார்!

இதெல்லாம் நமக்குப் படிப்பினைகள். தவறுகள் நமது பக்கமும் உண்டு.  அதே போல கொஞ்சம் ஏமாந்தால்  வியாபாரிகளும் நம்மைச் சோதித்துப் பார்ப்பார்கள். நாம் பல விஷயங்களக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. நாமும் தவறு செய்வோம் அவர்களும் தவறுகள் செய்வார்கள். இவைகளையெல்லாம் போகிற போக்கில் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

தவறுகள் இல்லாமல் மனிதனால் வாழ முடியாது! ஆனால் ஒரே தவறை மீண்டும் செய்யாதே என்பது தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!


No comments:

Post a Comment