Saturday 17 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி........! (32)

 ஏன் சிறிய தொழில்?

`ஏன் சிறிய தொழிலில் கவனம் செலூத்துங்கள் என்று வலியுறுத்துகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

வசதி படைத்தவர்கள் சிறியதோ பெரியதோ பிரச்சனை இல்லை. காரணம் ஒரு தரப்பினரிடம் பணம் இருக்கிறது அவர்கள் பெருந்தொழில்களில் ஈடுபடுவது என்பது இயல்பான காரியம்.

நண்பர் ஒருவர் ஞாபகத்திற்கு வருகிறார்.   ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை செய்தவர். குடும்பத்திற்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டார். வீடு, கார், பிள்ளைகளின் உயர் கல்விக்கான ஏற்பாடுகள், அனைத்தையும் செய்துவிட்டார். மனைவியும் வேலை செய்கிறார். சொந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்னும் வேட்கை அவரிடமிருந்தது. ஒரு சில இலட்சங்களைச் செலவு செய்து கணினித் துறையில் இறங்கிவிட்டார்.  நடுத்தர தொழில்  என்று சொல்லலாம். வாழ்த்துகள் நண்பரே!  இப்படி வசதி உள்ளவர்கள் தங்களுக்கு ஏற்ற தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால் சில ஆயிரங்களைக் கையில் வைத்திருப்பவர்கள் தங்களுடைய முதலீடுகளைச் சரியாகக் கவனித்து தொழிலில் இறங்க வேண்டும். சிறிய தொழிலில் தங்களது அனுபவங்களை வளர்த்துக் கொண்டு பின்னர் தொழிலை மேம்படுத்த வேண்டும்.

வியாபாரத்துறையில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள் இப்போது நமது இனத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். செய்கின்ற வேலையில் பாகுபாடுகள் ஏராளம். முன்னுக்கு வருவதில் முட்டுக்கட்டைகளைப் போட்டு முடக்கி விடுகிறார்கள். எத்தனை நாளைக்குத் தான் முணுமுணுத்துக் கொண்டிருப்பது என்கிற நிலையில் தான் பல இளைஞர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் சொல்ல வருவதெல்லாம் வியாபாரத்துறையில் காலெடுத்து வையுங்கள். துணிச்சலோடு வாருங்கள்.  யாரும் உங்களை விழுங்கி விடப்போவதில்லை. கணவனும் மனைவியும் சேர்ந்து செய்கின்ற தொழில் என்றால் அதற்கு இன்னும் வலிமை அதிகம். ஒரு சில பொருளாதாரக் காரணங்களுக்காக மனைவி வேலை செய்யட்டும் என்று நினைத்தால் அப்படியே செய்யுங்கள்.

நம் நாட்டில் நாம் மூன்றாவது பெரிய இனம். ஆனால்  தொழிலில் அது நமது விகிதாச்சாரத்தைக் காட்டவில்லை. நாம் மிகக் கீழான நிலையில் தான் இருக்கிறோம். ஒரு சிறிய தொழில் செய்கின்ற அளவுக்குக் கூட நம்மிடம் அந்த துணிச்சல் என்பது இல்லை.  பாக்கிஸ்தானியர், வங்காளதேசிகள் நமது தொழில்களைத்  தங்கள் வசம் இழுத்துக் கொண்டார்கள். நாம் பார்த்துக் கொண்டும், ரசித்துக் கொண்டும் இருக்கிறோம்!

முதலில் சிறிய சிறிய தொழில்களில் அக்கறைக் காட்டுங்கள்.  அதுவே நமக்கு மாபெரும் சக்தியைத் தரும்.


No comments:

Post a Comment