Friday 16 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (31)

 பொருள் ஈட்டுவதற்கு எது சிறந்த வழி?

பொருள் ஈட்டுவதற்கு இரண்டே இரண்டு வழிகள் தாம். ஒன்று வேலை  செய்வது அல்லது வியாபாரம் செய்வது.

இந்த இரண்டில் ஒன்றைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்.

வேலை செய்வதன் மூலம் நாம் பொருள் ஈட்டலாம். உலகெங்கிலும் வேலை செய்து பிழைப்பவர்கள் கோடிக் கணக்கில் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சம்பளமாகப்  பெறுகின்றனர். அந்த சம்பளம் என்பது ஒரு சிலருக்குப் போதுமானதாக  இருக்கலாம். பலருக்கு  அது ஒவ்வொரு மாதமும் பற்றாக்குறையில் தான் போய்  முடிகிறது!  முதலாளிகளைக் குற்றம் சொல்லுவது நியாயம் ஆகாது. ஒவ்வொருவரும்  தங்களது வரவு செலவுகளைத் தங்களது வருமானத்திற்கு உட்பட்டு செலவு செய்தால் தான் கட்டுப்படியாகும். இல்லாவிட்டால் கடனில் மாட்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

இன்னும் ஒரு சிலர் "நமக்கு ஏன் இந்த நிலை? ஏன் இந்த பற்றாக்குறை? நாம் ஏன் சம்பளம் வாங்க வேண்டும்? நம்மால் மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா?"  என்று நினைத்தவர்கள் தங்களது நிலையை மாற்றிக் கொண்டார்கள். அதற்கு நிறைய துணிவு வேண்டும். பல பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி வரும் என்று தெரிந்தே ஒரு முடிவை எடுத்தார்கள்!  பலப்பரிட்சையில் இறங்கினார்கள். பல தோல்விகளைச் சந்தித்தார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அது கடைசியில் வெற்றியில் தான் கொண்டு சேர்க்கும்! இடையில் பயந்து ஓடியவர்கள் தோல்வியே நிரந்தரம் என்று தங்களுக்குத் தாங்களே முடிவுக்கு வந்து தோல்வியைத் தழுவினார்கள்!

ஒன்றை நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். நீங்கள் வெற்றி பெற விரும்பினால் தோல்வியாளரிடம் போய் ஆலோசனைக் கேட்காதீர்கள். தோல்வியாளரிடம் ஆலோசனைக் கேட்டால்  அவர்களிடமிருந்து உங்களால் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும் என்று நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.  உங்களைச் சுற்றி எத்தனையோ வெற்றியாளர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் படியுங்கள். அவர்களுடைய குணாதிசயங்களை உன்னிப்பாகப் பாருங்கள். அவர்களின் வெற்றி எங்கிருந்து வருகிறது என்று கவனியுங்கள். நமக்கும் அவர்களுக்கும் அப்படி என்ன வித்தியாசம் என்று யோசியுங்கள்.

ஒருவரின் வெற்றி என்பது வெறும் பணத்தால் மட்டும் வருவதல்ல. ஒருவருடைய எண்ணங்கள், செயல்பாடுகள் சிந்தனைகள்  எல்லாமே வெற்றிக்கு அடிப்படையானவை.

வேலை செய்து பிழைப்பது என்பது எல்லாக் காலங்களிலும் பற்றாக்குறையை நோக்கித்தான் போகும். நம்முடைய வாழ்க்கை முறை அப்படித்தான்  அமைந்திருக்கிறது. அதுவே வியாபாரம் செய்பவர்களை நோக்குங்கள், அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கவனியுங்கள் - நம்மால் பொறாமைப் படத்தான் முடிகிறது! ஆனால் அதனை நாம் சரி செய்து கொள்ளலாம். தேவை எல்லாம் துணிச்சல்!

பொருளை எப்படி வேண்டுமானாலும் ஈட்டலாம். ஒன்று: பற்றாக்குறை வாழ்க்கை. இரண்டு: வளமான வாழ்க்கை! நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment