Saturday 24 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி,,,,,,,,,! (38)

 பொறுமை காக்க வேண்டும்!

தொழில் செய்பவர்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். 

அவசரம் அவசரமாக, உடனடியாகப் பணத்தைப் பார்த்து விட வேண்டும் என்று செயல்பட்டால் கடைசியில் ஒன்றுமில்லாமல் போக வேண்டி வரும்! வரலாம்!

நண்பர் ஒருவரைத் தெரியும்.  தோட்டமொன்றில் தொழிலாளியாக இருந்தவர். பகுதி நேரமாக பொது சேவையிலும் ஆர்வம் காட்டினார். அந்த நேரத்தில் அவருக்கு ஒரு நபரின் தொடர்பு ஏற்பட்டது.  அந்த நபர் நிலம், வீடு ஆகியவற்றை விற்று பணம் சம்பாதிப்பவர். பொதுவாக பிரோக்கர் என்று சொல்லுவார்கள். 

அவருக்கும் அவரைப் போன்று செய்ய வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது.  அதில் தவறில்லை. மனிதன் என்றால் ஒவ்வொரு நாளும் வளர்ச்சியடைய வேண்டும். தேங்கிக் கிடந்தால் அது குட்டையாகி, குப்பையாகி விடும்!

நண்பரும் அவரைப் போன்றே ஓரிரண்டு முயற்சிகளைப் பண்ணினார். அவருடைய நல்ல நேரம். அவருடைய முயற்சிகள் பலனளித்தன. பணத்தைப் பார்த்தார். பணம் கட்டு கட்டாக வந்தது. அதனால் அதனை முழு நேரமாக செய்ய வேண்டும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. அதுவும் தவறில்லை!

ஆனால் சில விஷயங்களில் அவர் கோட்டைவிட்டு விட்டார். அவருடைய கல்வி போதுமானதாக இல்லை. அவர் அதே தொழிலில் நிறைய படிக்க வேண்டியிருந்தது. சில நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளவேண்டி இருந்தது.  அவர் அதனை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. தனியாக ஒரு அலுவலகத்தைத் திறந்தார்.  அலுவலகம் ஏதோ பாதி கல்யாண மண்டபம் போல் காட்சியளித்தது!  ஒரு பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். அந்த பெண்ணுக்கு  என்ன மொழில் தான் தெரியும் என்று கணிக்க முடியவில்லை. ஆங்கிலம் தெரியாவிட்டால் பரவாயில்லை. மலாய் மொழியிலேயே கடிதப் போக்குவரத்துகளை வைத்துக் கொள்ளலாம். அதுவும் இல்லை. இவர் என்னவோ சொல்லுவார் அவர் என்னவோ ஆங்கிலத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எழுதுவார்! இவர் கடிதத்தில் கையெழுத்து இடுவார். அவர் போகுமிடம் எல்லாம் ஒரு வழக்கறிஞரைக் கூட்டிச் செல்லுவார். எல்லாம் பணம்  என்பதை மறந்து போனார்!

இரண்டு ஆண்டுகள் தாக்குப் பிடித்தார். அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை! எல்லாவற்றையும் இழுத்து மூடிவிட்டு தனது பழைய வேலைக்கே திரும்பிப் போய்விட்டார்!

அதில் நமக்கு வருத்தம் தான். அவர் தனது புதிய துறையில் சரியாகத்  திட்டமிடவில்லை. அவர் தனியாக அலுவலகம் திறக்க வேண்டிய அவசியமில்லை.  யாரும் அவருக்குத் தேவை இல்லை. தான் சொந்தமாகவே  நிலம், வீடு  விற்பனையைச் செய்திருக்கலாம். கடிதப் போக்குவரத்துகளைத் தனக்குத் தெரிந்தவர்களை வைத்தே செய்யலாம். தனக்குத் தேவை என்றால் வழக்கறிஞரின் உதவியை நாடலாம். எத்தனையோ வழிகள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. முதலில் அவர் சிக்கனத்தைக் கடைபிடிக்கவில்லை என்பது தான் அவர் செய்த பெரிய தவறு. கொஞ்சம் ஆர்ப்பாட்டம் அதிகமாகப் போய்விட்டது. இல்லையென்றால் அவர் வெற்றிக்குரிய மனிதராக இருந்திருப்பார்.

ஒரு தொழிலில் இறங்கிவிட்டதும் உடனடியாகப் பணத்தைக் குவிக்கலாம் என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.  பொறுமை வேண்டும். 

பூமியை ஆள வேண்டும் என்றால், நண்பணே! பொறுமை வேண்டும்!


No comments:

Post a Comment