Thursday 15 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (30)

 மாபெரும் தொழில்கள் தேவையா?

மாபெரும் தொழில்கள் தேவை இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. சொல்ல வருவதெல்லாம் எடுத்த எடுப்பில் நம் நாட்டு தொழில் அதிபர் டோனி ஃபெர்னாண்டெஸ் போல ஆகாசத்தில் பறக்க நினைக்க வேண்டாம். 

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மலேசிய இந்திய நிறுவனம் விமானத் தொழிலில் ஈடுபட்டது. எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் ஒரு சில மதவெறிக் கும்பலினால்  குறைகள் கண்டுபிடிக்கப்பட்டு கடைசியில் அந்த நிறுவனம் செயல் படமுடியாமலே போயிற்று. அவர்களால் எந்த ஒரு நெருக்கடியையும் சமாளிக்க முடியும். காரணம் அது உலகளவில் இயங்கும் நிறுவனம்.  

அவர்களோடு நம்மை ஒப்பிட முடியாது. தரையிலேயே செய்வதற்கு நமக்கு  நிறையவே தொழில்கள் இருக்கின்றன. இப்போதைய நிலையில் நாம் சிறிய தொழில்களில் கவனம் செலுத்துவோம். ஆரம்பம் அதுவாகத்தான் இருக்க முடியும். அது தான் நமது வளர்ச்சிக்கு நல்லது.

இப்போது உள்ள பெரிய தொழில்களை எல்லாம் எடுத்துக் கொண்டால்  எல்லாமே சிறிய அளவில் தான் ஆரம்பிக்கப்பட்டது. சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்டு நாளடைவில் பெருந் தொழிலாக இன்று வளர்ந்துவிட்டன.

ஒருவர் அனுபவம் பெறுவதற்கு ஒரே வழி சிறிய தொழில்கள் தான்.  அதன் மூலம் ஒவ்வொன்றையும் அணு அணுவாக நாம் கற்றுக் கொள்ளுகிறோம். நேரடி அனுபவம் நாம் பெறுகிறோம். அனுபவமே சிறந்த ஆசான்!

ஒரு காலக் கட்டத்தில் சிறிய தொழில், பெரிய தொழில் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சீனர்களே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இன்று  பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று எல்லா இனத்தாருமே சிறு தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றனர். நடுத்தர தொழில்களில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. 

தொழில் வளர்ச்சி என்பது வளர்ந்து கொண்டிருக்கிற காலக்கட்டம் இது. ஒரு விஷயத்தில் நான் வியக்கிறேன். நமது பெண்கள் தான் சிறு தொழில்கள் அதிக ஈடுபாடு காட்டுகின்றனர். அவர்களுக்குத் தெரிந்த உணவு, மாலை கட்டுதல், தேநீர் வியாபாரங்கள் போன்றவை அவர்களுக்குக் கை கொடுக்கின்றன.  பெண்களைப் பார்த்துத் தான் ஆண்களும் வியாபாரத் துறையில் ஈடுபாடுகளைக் காட்டுகின்றனர். நல்ல வளர்ச்சி!

மாபெரும் தொழில்கள் நமது நாட்டிற்குத் தேவை. அதில்  பெரும் இந்திய தொழில் அதிபர்கள் கவனம் செலுத்துகிறார்கள்.  ஆனால் இப்போது நாம், இந்திய சமுதாயம்,  இன்னும் அதிகமாக வளர வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.  இன்னும் தொழில் செய்யவே நாம் தயாராகாத  இல்லை என்பதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதனால் தான் சிறு தொழில் மூலம் நம்மை முதலில் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மாபெரும் தொழில்களில் ஈடுபட சிறு தொழில்களில் முதலில் நாம் கவனம் செலுத்துவோம்!

No comments:

Post a Comment