Tuesday 6 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........! (22)

 குடும்பத் தொழிலாக மாற்றுங்கள்


குடும்பத் தொழிலை தொடர்ச்சியாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் தமிழர்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரே முன் நிற்கின்றனர்.

தொழில் ஆரம்பிக்கப்படுகின்ற காலக் கட்டத்தில் நாம் ஒருவரே வேர்வையைச் சிந்தி தொழிலை வளர்க்க வேண்டிய நிலையில் இருப்பதில் வியப்பில்லை.  அதில் ஒன்றும் மாற்றமில்லை.  ஆனால் அப்படி வியர்வைச் சிந்தி வளர்க்கப்பட்ட தொழில் ஒரு தலைமுறையோடு தலைமறையாகி விடுமானால் அதில் எந்தப் பயனுமில்லை.

நான் படித்த, வளர்ந்த நகரை இப்போது திரும்பிப் பார்க்கின்ற போது அதிர்ச்சியைத்தான் காண முடிகிறது. அங்கு தமிழர்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பெரிய தொழில்கள், நடுத்தர தொழில்கள் அனைத்தையும் காணோம்! மறைந்து போயின!

என்ன ஆயிற்று?  அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்தார்கள். படித்த பின்னர் வேலைகளுக்குப் போய்விட்டார்கள். காரணம் "நான் பட்ட கஷ்டம் என் பிள்ளைகள் படக்கூடாது!" என்கிற மாபெரும் தத்துவம் அவர்களை முடக்கிப் போட்டுவிட்டது! வேலை செய்யும் அவன் படுகிற கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும்!

அதே சமயத்தில் சீன சமுதாயத்தைப் பார்க்கிறேன். முதல் தலைமுறை செய்த தொழிலை இப்போது பேரப்பிள்ளைகள் வரை சென்றுவிட்டது. இன்னும் தொடர்கிறது.  ஏன் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கவில்லையா?  அவர்கள் வெளி நாடு சென்று பெரிய படிப்பை படித்துவிட்டு இப்போதும் அவர்களின் தொழிலைத் தொடர்கிறார்களே!

நான் வளர்ந்த அந்த காலகட்டத்தில் மூன்று நிறுவனத்தினர் மட்டும் இன்னும் தொழில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று தங்க விறபனையில் உள்ளவர்கள் இன்னொன்று துணிமணி  விற்பனை செய்பவர்கள். ஒன்று இஸ்லாமியக் குடும்பம் இன்னொன்று செட்டியார் குடும்பம். இன்னொன்று அழகு பொருள்களை விற்பனை செய்யும் குஜாராத்தி குடும்பம்.மற்றவர்கள் இருந்த அடையாளமே இல்லை! அனைவரும் தமிழர்கள் என்பது தான் இதில் ஆச்சரியம்.

ஒரே வித்தியாசம். அப்போது பார்த்த அவர்கள் யாரும் இப்போது இல்லை. இப்போது புதிய தலைமுறையிடம் தங்களது தொழிலை ஒப்படைத்து விட்டார்கள். தொழில் தொடர்கிறது. இப்போது நடத்துபவர்கள் அனைவரும் படித்த பட்டதாரிகள். தொழிலை இன்னும் விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டுகிறார்கள். முதலீடுகளை இன்னும் அதிகப்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் படிப்பு தேவை தானே?

நாம் படிப்பு என்பதையே வேறு ஒரு கோணத்தில் பார்க்கிறோம். படிப்பதே வேலை செய்வதற்குத்தான் என்கிற ஒரு மனோநிலையை உருவாக்குகிறோம்! அவர்களோ படித்தால் தொழிலை இன்னும் வெற்றிகரமாக நடத்தலாம் என்கிற மனோநிலையை உருவாக்குகிறார்கள்!

எப்படியோ நாம் செய்கின்ற இப்போதைய தொழில்கள் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லப்பட வேண்டும். தொழிலை இன்னும் விரிவாக்கம் செய்ய வேண்டும். அது அடுத்த தலைமுறையினரிடம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

No comments:

Post a Comment