Saturday 3 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி...........! (20)

 ஒரு சில படிப்பினைகள்

 
வெற்றி பெற்ற ஒரு  சிலரை நான் பார்த்திருக்கிறேன்.  அவர்களிட அசாத்தியமான சில பண்புகள் இருக்கின்றன.  எங்கு கற்றார்கள், எங்கிருந்து அதனைப் பெற்றார்கள், அதன் மூலம் என்ன என்பதெல்லாம் நமக்குப் புரியாத புதிர்.

எனக்குத் தெரிந்த உறவு முறைகளில் ஒருவரிடம் இந்த அசாத்தியமான குணம் இருப்பதைக் கண்டு அயர்ந்து போனேன்! அவர் பல பேருந்துகள், லோரிகள், உணவகங்களுக்குச் சொந்தக்காரர். அவருடைய ஆரம்பம் என்பது காரில் பின்னால் கய்கறிகளை வைத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று வியாபாரம் செய்தவர். அவருடைய வளர்ச்சி என்பது பெருமைப்படத்தக்கது. அந்த வளர்ச்சி  சும்மா வந்துவிடவில்லை.  கடும் உழைப்பு. உழைக்க அஞ்சாதவர். 

இவரிடம் ஒரு பழக்கம். இவர் தனது வாடிக்கையாளர்களிடம் ஜப்பானியரைப் போல குனிந்து வணங்குவார்!  இயற்கையாகவே அவரிடம் அந்த பழக்கம் இருந்தது. ஒரு வேளை ஜப்பானியரைப் பார்த்து அவருக்கு அந்த பழக்கம் வந்ததா தெரியவில்லை! அந்த பணிவை மக்கள் விரும்பினர் என்பது மட்டும் உண்மை. அவ்ருக்கு உயர்வைத் தந்தது என்பதும் உண்மை.

எனது நண்பர் ஒருவர் பல லோரி டேங்கர்களை வைத்திருப்பவர். அவருடைய அந்த டேங்கர்கள் தினசரி ரப்பர் பால் ஏற்றிக் கொண்டு துறைமுகம் செல்ல வேண்டும்.  சமயங்களில் அவருடைய ஓட்டுனர்கள் தீடீரென்று வேலைக்கு வராமல் போய் விடுவர். நண்பர் களத்தில் இறங்கிவிடுவார். அவரே ஓட்டுனராக மாறிவிடுவார்.  இது ஒன்றும் அதிசயம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அரசாங்கத்தில் பெரிய பதவியில் இருந்தவர் அவர். அப்படி செய்வது அதிசயம் தானே!

எனது சீக்கிய நண்பர்  ஒருவர் தோட்டத்தில் மருத்துவ உதவியாளராக இருந்தவர். அவருடைய தந்தையார்  டெக்சி ஓட்டுனராக இருந்தவர். அவர் தந்தையாரின் மரணத்திற்குப் பின்னர் தனது வேலை முடிந்ததும்  டெக்சி ஓட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதனையே முழு நேரமாக எடுத்துக் கொண்டார்.

ஒரு சிலருக்கு நாம் எதிர்பார்க்காத சில குணாதிசயங்கள் உண்டு. எதற்கும் அஞ்சுவதில்லை.  எதற்கும் பயப்படுவதில்லை. யார் என்ன சொல்லுவார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஊர் என்ன சொல்லும் ஊர் என்ன பேசும் என்பது பற்றி அவர்களுக்குப் பெரிதாகப் படுவதில்லை.

நமது பாதை சரியாக இருந்தால் எல்லாம் சரியானதே!



 பார்த்திருக்கிறேன். 

No comments:

Post a Comment