Wednesday 14 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.........! (29)

நாம் பலவீனமான சமுதாயம் அல்ல!


ஓர் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம்மில் ஒரு சிலர் நினைப்பது போல நாம் பலவீனமான சமுதாயம் அல்ல.

நமது தமிழ் அரசர்கள் கடல் வழியாகப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்தவர்கள். அவர்கள் எந்த நாட்டும் மீதும் படை எடுக்கவில்லை. வணிகம் ஒன்றையுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள். வணிகம் செய்தனர் அதைத் தவிர அவர்கள் வேறு நோக்கங்களைக் கொண்டிருக்கவில்லை. பல நாடுகளை வென்றனர் ஆனால் எந்த நாட்டையும் அடிமைப்படுத்தவில்லை.  அது தமிழனின் பலவீனம் அல்ல. அவர்கள் எல்லாரையும் வாழ வைத்தனர். எல்லாக் காலங்களிலும் அமைதியையே விரும்பினர்.

இப்போதும் கூட நாம் வீழ்ந்துவிடவில்லை. எத்தனையோ தடைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். பல துறைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறோம். நமது ஒவ்வொரு வெற்றிக்கும் நாமே காரணமாக இருந்திருக்கிறோம்.  யாருடைய உதவியும் இல்லாமல் பல தடைகளைத் தகர்த்தெறிந்திருக்கிறோம். அரசாங்கம் கோடிக்கணக்கில் தொழில் செய்பவர்களுக்குப் பண உதவிகள்  செய்தாலும் அது என்னவோ அரசியல்வாதிகளுக்குத் தான் போய்ச் சேருகிறது!

ஆக, இந்த வெற்றிகள் எல்லாம் எப்படி நிகழ்ந்தது? நாம் தொழில் செய்ய வேண்டும் என்கிற முயற்சி நம்மிடம் எப்போதும் உண்டு. தோட்டப்புறங்களில் அடிமை வாழ்க்கை தான். ஆனால் அங்கும் சிறு சிறு வியாபாரங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. காலை நேரத்தில் பசியாறல்,  பசும்பால், நெய் விற்பனை, வீட்டிலிருந்தே மளிகைக்கடை வைத்து நடத்துதல், ஆடு மாடு விற்பனை,  ஆட்டிறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை,  தையல் நிலையங்கள் - இவைகள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருந்தன. பட்டணங்களில் இருந்த ஆரவாரம் இங்கில்லை என்றாலும் எல்லாம் அமைதியாக வியாபாரங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.

நமது வியாபார சிந்தனை என்பது நமது இரத்தத்தில் ஊறிப் போனது. அது எங்கோ ஒரு மூலையில் நம்மோடு ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது. தேவை எல்லாம் ஓரு தூண்டுதல், நாலு நல்ல வார்த்தைகள், கொஞ்சம் உற்சாகப்படுத்துதல் - இவைகள் தான் இன்றைய இளைய தலைமுறைக்குத் தேவை.  குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் அதுவே அவர்களுக்கு  உற்சாகப்பானமாக அமையும். கணவனுக்கு மனைவி அணுசரனையாக இருந்தால் அது போதும் அவன் சாதனைகள் புரிய!

எப்போதும் ஞாபகத்தில் வையுங்கள். நாம் தாழ்ந்த சமுதாயம் அல்ல.  யாருக்கும் இளைத்த சமுதாயமும் அல்ல.  நாம் தொழிலில் தோற்ற சமுதாயம் அல்ல. வெற்றி பெற்ற சமுதாயம். இன்றும் வெற்றியை உலகிற்கு அறிவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.  ஆனந்த கிருஷ்ணன், ஞானலிங்கம், டோனி ஃபெர்னாண்டஸ் - இவர்கள் எல்லாம் நம் கண் முன்னே நிற்கும் சான்றுகள். உள்ளூரில் இன்னும் பலர் இருக்கின்றனர். எல்லாமே நமக்கு எடுத்துக்காட்டுகள்.

இவர்கள் எல்லாம் மாபெரும் வெற்றியாளர்கள். அதற்காக பல ஆண்டுகள் உழைத்திருக்கின்றனர். வெற்றி சும்மா வருவதில்லை.  உழைப்பு தான் வெற்றி. 

அதனால் உங்களால் முடியாது என்று  எவனாவது சொன்னால் அவனைப் புறந்தள்ளுங்கள். உங்கள் வட்டத்தில் அவனைச் சேர்க்காதீர்கள்! அவன் ஆபத்தானவன்.

கடைசியாக ஒன்று சொல்லுகிறேன். நாம் யாருக்கும் தாழ்ந்தவர்கள் அல்ல. நாம் பலவீனமானவர்கள் அல்ல!

நாம் வெற்றியாளர்கள்!

No comments:

Post a Comment