நாம் பார்வையாளர்கள் அல்ல!
நாம் எல்லாக் காலங்களிலும் சீனர்களின் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்திருக்கிறோம். அதிசயப்பட்டிருக்கிறோம்.ஆனால் ஒன்றை நாம் மறந்து விட்டோம். சீனர்களின் தொழில் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைகிறோம் அல்லது அதிசயம் அடைகிறோம், எல்லாமே சரி தான். ஆனால் நாம் அவர்களைப் போல ஏன் அந்த அதிசயத்தைச் செய்ய மறுக்கிறோம்? அது தான் எனக்குப் புரியவில்லை!
சீனர்கள் நம் கண் முன்னே சாதனைகள் புரிகிறார்கள் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஆனால் அதனையே ஏன் நாம் ஒரு பாடமாக எடுத்துக் கொள்வதில்லை?
இதோ ஒரு பாடம்: தோட்டமொன்றுக்கு சீனர் ஒருவர் வருகிறார். அவரிடம் உள்ளது எல்லாம் அவருடைய பழைய சைக்கிள் வண்டி, கையில் ஒரு உளி. அவருக்குத் தெரிந்த ஒரே திறன் என்பது அந்த உளியைக் கொண்டு மரக்கன்றுகளுக்கு ஒட்டுக் கட்டுவது.
அதற்காகத்தான் அவர் அந்த தோட்டத்திற்கு வந்திருந்தார். பார்ப்பதற்கு ஏதோ பாவப்பட்ட மனிதர் போல இருப்பார். நல்ல மனிதராகவும் இருந்தார். தொடர்ந்து அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய வேலை மேலிடத்திற்குத் திருப்திகரமாக அமைந்தது. வேலை முடியும் தருவாயில் அவர் பால் மரம் சீவும் குத்தகையை எடுத்தார். இப்போது "கான்ரேக்டர்" உயர்வு கிடைத்தது. பிறகு அந்த தோட்டத்திலேயே அவருக்கு வியாபாரம் செய்ய மளிகைக்கடை ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. எல்லாமே சீராக ஓடிக் கொண்டிருந்தது.
அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள். அதில் மூன்று பேர் சொந்தமாக பெட்ரோல் விற்பனை நிலையம் வைத்து நடத்தினார்கள். பின்னர் பல்வேறு தொழில்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள்.அதில் ஒருவர் சிறிய ரப்பர் தோட்டம் வாங்கி சொந்தமாகவே தொழிலைச் செய்கிறார்.
ஆனால் கதை பேசும் கில்லாடிகளான நமது மக்கள் அதையே சொல்லிச் சொல்லி ஏதோ ஒரு நகைச்சுவையாக பேசுவதைத் தவிர அதை ஒன்றும் பாடமாக எடுத்துக் கொள்ளவில்லை. காலங்காலமாக தோட்டத்தில் வேலை செயூம் நம்மவர்களுக்கு உளி என்பது புதிதா அல்லது ஒட்டுக்கட்டுவது என்பது புதிதா? ஆனால் ஒட்டுகட்டத் தெரியவில்லை!
முதல் தலைமுறை உளியோடு வந்தது. அடுத்த தலைமுறை பலவித தொழில்களுக்குத் தன்னை மாற்றியமைத்துக் கொண்டு நகர் பக்கம் நகர்ந்துவிட்டது. நாம்? முதல் தலைமுறை, அடுத்த தலைமுறை இன்னும் அடுத்த தலைமுறை - பால்வெட்டு, பால்வெட்டு வேறு எதுவும் தெரியவில்லை! தோட்டமே கதி!
நம்மைச் சுற்றியே நமக்கு நிறைய பாடங்கள் இருக்கின்றன. நாம் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. ஓர் அடிமை வாழ்க்கைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனால் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவது என்பது எளிதல்ல!
ஆம்! நாம் பார்த்துக் கொண்டே இருந்தது போதும்! எல்லாக் காலங்களிலும் பார்வையாளர்களாக இருந்தது போதும். பார்த்தது போதும். இனி செயலில் இறங்குவோம்!
No comments:
Post a Comment