Sunday 18 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி ..........! (33)

நம்மால் ஏன் வெற்றி பெற முடியாது?


நம்மிடையே, ஒரு சிலர், சில கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தொழில் செய்ய நினைக்கும் இளைஞர்களுக்கு இவர்கள் எப்போதுமே தடையாக உள்ளவர்கள்.

"நமக்கு இந்த வியாபாரம் எல்லாம் சரிப்பட்டு வராது!  அதெல்லாம் சீனர்களுக்குத்தாம்'பா! காலம் காலமா அவன் தான் செய்யிறான்! அவன் தான் ஏச்சு பிழைப்பவன்!  நம்மால அதெல்லாம் முடியாது! நமக்கு ஏய்க்கவும் தெரியாது!பிழைக்கவும் தெரியாது!" என்று கூறுபவர்கள் நம்மிடையே உள்ளனர்.

இவர்கள் பேசுவதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை எடுத்துக் கொண்டால் உண்மையில் நாம் துணிவை இழந்து விடுவோம்! கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது போன்று பேசுபவர்களிடம் நாம் எந்த உறவையும் வைத்துக் கொள்ளக் கூடாது!  அவர்களிடமிருந்து விலகி நின்றாலே நம்மிடமிருந்து ஒரு சனியன் ஒழிந்தது என்று எடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாக நாம் எதைப் பேசினாலும் எதிர்மறைக் கருத்துகளை கூறுபவர்கள் தான் நம்மைச் சுற்றியே இருப்பார்கள். அதில் நம் உறவுகளும் அடங்குவர்.   அவர்களுடைய கருத்துகளைச் செவிமடுப்போம். அதோடு வைத்துக் கொண்டால் போதும். அந்த கருத்துகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை.  ஆனால் கணவன் - மனைவி என்கிற போது இருவரும் ஒத்தக் கருத்துகளைக் கொண்டிருந்தால்  நன்மைப் பயக்கும். அது தொழிலுக்கும்  நல்லது. எதிர்காலத்திற்கும்  நல்லது.

தொழில் என்றால் அது சீனர்கள் தான் திறன் பெற்றவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. சீனர்கள் தொழில் செய்வதற்கு முன்னரே நமது செட்டியார் சமூகம் இந்நாட்டில்  தொழிலை செய்து வந்திருக்கிறார்கள். தமிழ் முஸ்லிம் சமூகமும் அப்போதே தொழில் செய்தவர்கள் தான்.சீன சமூகம் ஓரளவு நகர் பக்கம் இருந்ததால்  நகர்ப்புற வாய்ப்புகளை அவர்கள்  பயன்படுத்திக் கொண்டனர். நமது இனமோ தோட்டப்புறங்களில் இருந்ததால் அப்போதே நம்மைத் தனிமைப்படுத்தி  ஆண்டுக் கணக்கில் தனிமைப்பட்டுக் கிடந்தோம்! அது தான் உண்மை!  சீனர்கள் செட்டியார்களிடம் கடன் வாங்கித் தான் தங்களது தொழிலை ஆரம்பித்தார்கள் என்கிற சரித்திரமும் உண்டு என்பதையும் மறக்க வேண்டாம்.

நமக்கு மட்டும் தான் தொழிலில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் வேண்டும். நமக்கு அந்த திறமை என்பது இயற்கையாகவே  அமைந்தது. காரணம் அது நமக்கு வழிவழியாக வந்தது.   நமது சரித்திரத்திரத்தை நாம் அறியவில்லை என்பது தான் நமக்குள்ள சிக்கல்.

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு"  என்று சும்மா யாரும் சொல்லி வைக்க வில்லை.  திரைகடல் பல ஓடியிருக்கிறோம். திரவியமும் தேடியிருக்கிறோம். ஒளவையார் காலத்திற்கு முன்னரே அது நடந்திருக்கிறது. அதனால் திரவியம் தேடுவது என்பது நமக்குப் புதிதல்ல.  கடல் கடந்தாலும் சரி கடல் கடக்காவிட்டலும் சரி  வியாபாரம் செய்து திரவியம் தேடுவது என்பது நமக்கு இயல்பான ஒன்று.

வெற்றி என்பது நமது இரத்தத்தில் ஊறியது. வியாபாரமும் அதற்கு விதி விலக்கல்ல. அந்த ஊறல் என்பது அப்போதும் இருந்தது இப்போதும் நம்மிடையே தொடர்கிறது. அது எப்போதும் தொடரும். நாம் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை!

நம்மிடையே உள்ள பெரும்பாலான குறைபாடுகள் என்பது தொழில் தொடங்குவதற்கான மூலதனம் என்கிற குறைபாடு மட்டும் தான். என்னைக் கேட்டால் ஆரம்பகால மூலதனம் என்பது நம்முடையாதகவே இருக்க வேண்டும்.  கையில் பணம் இல்லாவிட்டால் அதற்காக உழைத்து மூலதனத்தைச் சேகரித்துக் கொள்ள வேண்டும். நாம் தொழில் செய்ய இன்னொருவர் பணம் போடுவார் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது!

ஆக வெற்றி என்பது ஏதோ ஒரு சாராருக்கு முட்டும் தான் சொந்தம் என்கிற பேச்சு ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை! அதிலும் வியாபாரத்தில் வெற்றி என்பது நமக்கு மட்டுமே சொந்தம். நம்முடைய அறிவுக்கு ஈடாக யாரையும் ஒப்பிட முடியாது! நம்முடைய திறமைக்கு ஈடாக யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது!

நம்மால் வெற்றி பெற முடியும்! முடியும் என்று நினைத்துச் செயபடுங்கள்! அதுவே வெற்றி!



No comments:

Post a Comment