Thursday 8 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி..........(24)

 யார் அதிகம் கஷ்டப்படுகின்றனர்?


கோவிட்-19 காலத்தில் அதிகம் சிரமத்திற்குள்ளானவர்கள் உள்ளாகிறவர்கள்  யார் என்று பார்த்தால் வேலை செய்து பிழைப்பவர்களே அதிகம்.

வேலை செய்து பிழைப்பவர்கள் என்னும் போது கீழ்த்தட்டு மக்கள் மட்டும்  அல்ல மேல்தட்டு மக்கள், நடுத்தரத்தட்டு மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லாருமே வேலை செய்து பிழைக்கும் மக்கள். காரணம் மாதம் முடிந்ததும் சம்பளம் கிடைத்து விடும். இப்போது அனைத்தும் நின்றுவிட்டன! வேலை இல்லை! தொழிற்சாலைகள் பல மூடப்பட்டுவிட்டன. வெளிநாட்டு நிறுவனங்கள் மூட்டைக் கட்டுகின்றன. உள்நாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கருணை காட்டும்படி கண்ணைக் கசக்குகின்றன! ஒரு பொறுப்பற்ற அரசாங்கத்திடம் நம்மை ஒப்படைத்துவிட்டோம்! பலனை அனுபவிக்க வேண்டியது நமது கடமையாகி விட்டது!

ஆனால்  சீனர்கள் அப்படி ஒன்றும் கடைகளைச் சாத்திவிட்டு ஓடிவிடவில்லையே! பெரிய நிறுவனங்கள் ஒரு வேளை  பாதிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் நடுத்தர நிறுவனங்கள் பெரிய பாதிப்பை எதிர்நோக்கவில்லை! என்னதான் ஊரடங்கு என்று சட்டம்  போட்டாலும் வீட்டில் சமைக்க வேண்டியுள்ளதே! சீனர்கள் தங்களது நிறுவனங்களை மூடிவிட்டு ஓடினால் சமைப்பது எப்படி?  ஆனால் மலேசியர்களான நாம் அதிர்ஷ்டசாலிகள். சீனர்கள், மலாய்க்காரர், இந்தியர் - அனைத்து இனத்தவரின் மளிகைக் கடைகள் திறந்திருப்பதால் மக்கள் பொருள்கள் வாங்குவதில் சிரம்பப்படவில்லை. ஆனால் பொருள்கள் தாரளமாகக் கிடைப்பது என்னவோ சீனர்களின் கடைகளில் தான்.

இங்கு நான் சொல்ல வருவது எல்லாம் தொற்று நோயினால் அதிகப் பாதிப்பு என்பது வேலை செய்து பிழைக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் தான்.  ஆனால் வியாபாரத்தில் உள்ளவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. எப்படியோ அவர்கள் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள பல வழிகள் உள்ளன. பணம் தான் பிரதானம் என்றால் அதனை அவர்கள் புரட்டிக் கொள்ள முடியும்!

ஆனால் வேலையில் இருக்கும் கீழ்மட்டத்தினரின் நிலை என்ன? சொற்ப ஊதியத்தில் குடும்பத்தை நடத்தும் இவர்கள் என்ன தான் செய்வார்கள்? தினசரி சாப்பாடு, பிள்ளைகள், கல்வி - இப்படி பல அன்றாடக்  கடமைகள் இருக்கின்றன.  நல்ல வேளை இன்று பல நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு உதவியாக இருக்கின்றன. பட்டினி கிடந்து ஏதேனும் மரணங்கள் நேர்ந்ததா என்கிற விபரங்கள் நம்மிடம் இல்லை. அதனையும் எளிதாக மறைத்துவிடுவார்கள்!

எப்போதும் யாரையும் நம்பி இருக்காதீர்கள். வேலை, வேலை என்று அலையாதீர்கள். சிறு சிறு தொழில்கள் ஈடுபட்டாலும் நம்மால் பிழைத்துக் கொள்ள முடியும் என்பதை இந்த கொரோனா தொற்று காலத்தில் நாம் நேரடியாகவே பார்க்கிறோம்.

நிச்சயமாக சிறு தொழில்கள் உங்களுக்குக் கைக்கொடுக்கும். காலம் புராவும் உங்களுக்குக் கைக்கொடுக்கும். உங்கள் உயர்வுக்கு வழி வகுக்கும்.

No comments:

Post a Comment