Petronas Twin Towers
பொதுவாக தொழிலில் உயர வேண்டும் என்னும் வேட்கை உள்ளவர்கள் எப்போதுமே உண்டு.
ஆமாம், அதற்காகத்தானே தொழிலில் இறங்குகிறோம்? தொழிலில் இறங்குபவர்கள் ஆயிரத்தில் ஒருவனாகத்தான் இருக்க விரும்புவார்கள். இல்லாவிட்டால் நூறோடு நூற்று ஒன்னாக அவர்களும் எங்கேயாவது வேலை செய்து கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்!
வேலை செய்பவர்கள் அடுத்த பதவி உயர்வு, ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வு - இது தான் அவர்களின் எதிர்பார்ப்பு. பதவி உயர்வு கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்! பதவி உயர்வு என்பதெல்லாம் நிறுவனத்தின் உள் அரசியலைப் பொறுத்தது! சம்பள உயர்வு என்பதெல்லாம் அவர்களுடைய வேலை ஒப்பந்தத்தைப் பொறுத்தது. இது தான் அவர்களது எதிர்பார்ப்பு. இந்த வருமானத்திற்குள் தான் அவர்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் தொழில் செய்பவர்களின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது. அவர்கள் தங்களின் வருமானத்தை மாத சம்பளம் வாங்குபவர்களோடு ஒப்பிட முடியாது. ஒரு நாள் வருமானம் மிகக் குறைவாக இருக்கும். அடுத்த நாள் வருமானம் நாம் எதிர்பாராத அளவு நமது எதிர்பார்ப்பை மிஞ்சிவிடும். அது தான் வியாபாரம் என்பது. வருமானத்தை அதிகரிக்க இன்னும் கொஞ்சம் உழைப்பை அதிகம் போட வேண்டும்.
வியாபாரத்துறையில் உழைப்பு மட்டும் தான் உங்களது வருமானத்தை அதிகரிக்கும். நாம் வேலை செய்யும் போது அதிக உழைப்பை நாம் கொடுத்தாலும் நமக்கு அது பெரிய அளவில் பயன் தராது. பயன் இல்லை என்றதுமே முணுமுணுக்கத் தோடங்கி விடுவோம்! இது இயல்பு தான். அது தான் நடந்து கொண்டிருக்கிறது!
வியாபாரத்தில் மாத சம்பளம் இல்லை என்றாலும் நமது மாத வருமானம் ஒவ்வொரு மாதமும் - வித்தியாசப்படும். வித்தியாசம் என்பதை விட வருமானம் அதிகரிக்கும் என்று தாராளமாகச் சொல்லலாம். அதே போல இங்கே பதவி உயர்வு என்பதெல்லாம் இல்லை. நீங்கள் இருப்பதே பெரிய பதவி தான். முதலாளி என்பதே பெரிய பதவி தானே! அதைவிட பெரிய பதவி என்ன உண்டு?
வியாபாரத்துறையில் உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வாய்ப்புக்கள் அதிகம். உங்களின் வருமானத்தை நீங்களே திட்டமிடலாம். இந்த ஆண்டு உங்களின் வருமானம் ஐந்து இலட்சம் என்றால் அடுத்த ஆண்டு அதனை பத்து இலட்சமாக மாற்றிக் கொள்ளக் கூடிய சக்தி வியாபாரத்தில் மட்டுமே முடியும். உங்களுக்கென்று சில இலட்சியங்கள் இருக்கலாம். இலட்சங்கள் சம்பாதிக்கலாம். கோடிகளையும் சம்பாதிக்கலாம். ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை அமைக்கலாம். இதெல்லாம் முடியாது என்று சொல்ல முடியாது. தொழிலில் இதுவெல்லாம் சாத்தியம்.
தொழில் மட்டும் தான் உங்களை உயரே உயரே கொண்டு செல்லும். வானமே எல்லை என்பார்கள். உங்கள் எல்லையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கு உயரே உயரே என்றால் அது ஏதோ ஒரு இனத்தைத் தான் குறிக்கும் என்பதில்லை. சீனர்களாலும் முடியும். அதே போல இந்தியர்களாலும் முடியும். சீனர்கள் தொழில் துறையில் பல தலைமுறைகளைக் கடந்து விட்டார்கள். நாமோ இன்னும் ஆரம்பக் கட்டத்தில் தான் இருக்கிறோம். ஆனால் நம்மில் ஒரு சிலராவது உலக வரிசையில் இருக்கத்தான் செய்கிறோம்.
தொழில் என்பது நம்மை உலகளவில் உயர்த்தும். அதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
No comments:
Post a Comment