Wednesday 21 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி .......! (36)

 தொழிலைப் பற்றிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!

தொழிலில் காலெடுத்து வைத்த பின்னர் உங்களது எண்ணங்கள் முழுவதும தொழிலில் தான் இருக்க வேண்டும்.

சொந்தக் கடை. நினைத்தால் கடையை அடைத்துவிட்டுப் போகலாம் என்று தொழிலுக்கு வருவதற்கு முன்னர் கூறலாம். ஆனால் வந்த பின்னர் அப்படியெல்லாம் தான்தோன்றித்தனமாக பேச முடியாது. அது உங்களுக்கே தெரியும். காரணம் நாம் தினமும் எதிர் நோக்கும் போட்டிகள் அதிகம். ஒரு நாள் அடைத்தால் நமது வாடிக்கையாளர்கள் வேறு ஒரு கடை பக்கம் திரும்பிவிடுவார்கள் என்கிற பயம் நமக்கு உண்டு. அடுத்த கடைக்காரனும் அப்படித்தான் நினைக்கிறான்! போட்டிகள் நிறைந்த உலகம்! அப்படித்தான் இருக்கும்!

இன்னொரு பக்கம் அரசியல்வாதிகள். எனக்குத் தெரிந்த நண்பர்களின் ஒரு சில அனுபவங்களைச் சொல்லுகிறேன். தொழிலில் இன்னும் சரியாக வளரவில்லை. வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதற்குள் அரசியல்வாதிகள் அவர்களைத் தேடி வந்துவிடுவார்கள். அவர்களுக்குப் பலவிதமான ஆசைகளைக்காட்டி அவர்களைப் பெரிய தொழிலதிபர் ரீதியில் அவர்களைக் கொண்டு சென்றுவிடுவார்கள். பாவம் அவர்கள்! தொழிலையும் கவனிக்க முடியாமல், அரசியலிலும் பேர் போட முடியாமல் தொழிலையே மூடிவிட்டுப் போகும் சூழல் ஏற்பட்டுவிடும்.

சீனர்களும் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பணம் தான் முதலிடம். பணம் சம்பாதித்தப் பின்னர் தான்  அரசியல் பக்கம் தலை காட்டுவார்கள்.  தொழிலில் எந்த அளவு உயர முடியுமோ அந்த உச்சத்தை அவர்கள் தொட்ட பின்னர் தான் அரசியல், பொது சேவை என்பதெல்லாம் அதன் பின்னர் தான். நாமோ 'அதுவும் இல்லை இதுவும் இல்லை' இரண்டும் கெட்டான்!

தொழிலை நாம் விளையாட்டாக எடுத்துக் கொள்ளுகிறோம். அது தவறு. தொழில் என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயம்.  கொஞ்சம் ஏமாந்தால் நாறிப் போவோம்!

நம்முடைய தேவை எல்லாம் தொழிலின் மூலம் பூர்த்தி செய்யப்பட  வேண்டும். அதற்காகத்தானே நாம் தொழிலில் இருக்கிறோம்? தொழிலை சரியான நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தொழிலை விட்டு நம்மாலும் ஓடிவிட முடியாது. நமக்கு உடலில் சக்தி இருக்கும் வரை நாம் உழைக்கப் போகிறோம்.  நமக்கு எப்போது ஓய்வு என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது! இருக்கும் வரை வேலை! அவ்வளவு தான்! நமது முன்னோடிகள் எல்லாம் அப்படித்தானே?

நாம் எந்நேரமும் தொழில், தொழில் தொழில் தான்! நாம் மூச்சு விடும் போதும் சரி,  தூங்கும் போது சரி, விழிக்கும் போதும் சரி, காலை மாலை இப்படி எல்லாக் காலங்களிலும் தொழில் தொழில் தொழில் மட்டும் தான். இதற்கெல்லாம் நமக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள்!  சீனர்கள் அப்படித்தானே இருக்கிறார்கள்!  அவர்கள் குடும்பங்கள் மகிழ்ச்சியாகத்தானே இருக்கின்றன. பொருளாதாரம் வலிமை பெற்றிருந்தால் மற்ற வலிமைகள் எல்லாம் தானாகவே வந்துவிடும்!

அருமை நண்பா! தொழில் என்று வந்துவிட்ட பின்னர் பொருளாதார வலிமைக்குத்தான் முதலிடம். பொருளாதார வலிமை தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

பொருளாதார வலிமையைப் பெருக்கிக் கொள்ளுங்கள்! வளமாக வாழுங்கள்!


No comments:

Post a Comment