Monday 26 April 2021

எனது தொழில் சாம்ராஜ்யத்தை நோக்கி.....! (41)

 முதலில் தோல்வி! அடுத்தது தான் வெற்றி!


வணிகத்தில்  வெற்றி என்பதெல்லாம் எடுத்த எடுப்பில் வர வழியில்லை. 

அதுவும் முதல் தலைமுறையில் வணிகத்தில் இருப்பவர்கள் அடுத்து வரப்போகும் தலைமுறையினரை விட கொஞ்சம் அதிகமாகவே தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.

அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை! காலங்காலமாக முதல் தலைமுறையினர் தான் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். காரணம் வணிகம் அவர்களுக்குப் புதிது. அனுபவக் குறைவு. வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கட்டுப்படியான விலைகளில் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.  பொருள்களைக் கொள்முதல் செய்கின்ற இடங்களில் அங்கு அவர்களின் திருப்தி என்பதும் முக்கியம். சமயங்களில் கூடுதலான விலைகளில் பொருள்களை வாங்க வேண்டி நேரும். கையில் பணம் இல்லாது கடனில் வாங்கினால் விலையோ இன்னும் அதிகரிக்கும்.

அத்தோடு முதல் தலைமுறையினருக்கு சுற்றும் புறமும், உறவுகளும் உற்றாரும் அவர்களின்  பல அமங்கலமான ஆலோசனைகளும் அவர்களைக் கிறுகிறுக்க வைக்கும்! நல்ல வார்த்தை, உற்சாகமான வார்த்தை, ஆறுதலான வார்த்தை எதனையும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது!  அதுவும் நாம் வெற்றி பெறுவதை விட தோல்வி அடைவதையே அவர்கள் விரும்புவார்கள்!    காரணம் "நான் அப்போதே சொன்னேன் பார்!" என்று  மார்த்தட்டுவதற்கு  அவர்களுக்கு நமது தோல்வி தான் ஆதாரம்!

ஆனாலும் எல்லா வணிகர்களுமே,  தங்களுக்குப் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, அனைத்தையும் கடந்து தான் செல்ல வேண்டும். அது நஷ்டமோ கஷ்டமோ,  கடுஞ்சொல்லோ கனிவான சொல்லோ, மானமோ அவமானமோ எல்லாமே வரத்தான் செய்யும். ஏன்? சாதாரணமாக தொழில் செய்பவர்களுக்கு மட்டும் தானா இவை  வருகின்றன? வேலை செய்து பிழைப்பவர்களுக்கும் வரத்தானே செய்கின்றன! ஆனால் ஒரு வித்தியாசம். தொழில் செய்பவர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே வரும். 

எப்படிப் பார்த்தாலும் வெற்றி தான் நமது இலக்கு என்றாலும் முதலில் தோல்வியைச் சந்தித்துவிட்டுத் தான் அடுத்து வெற்றிக்குச் செல்ல வேண்டும். அதனால் தோல்வி என்றதுமே ஓடி ஒளிய வேண்டும் என்கிற எண்ணத்தைப் போக்க வேண்டும். வெற்றிக்குப்  பாதை அமைத்துக் கொடுப்பதே தோல்விகள் தான்!  தோல்விகள் இல்லையென்றால் வெற்றியின் அருமை நமக்குத் தெரியாது.

தோல்வி தானே? இருந்துவிட்டுப் போகட்டும்! மீண்டும் தோல்வி வராமல் பார்த்து கொள்வோம்! ஒன்று தான் தேவை. நமது மனதை நாம் தான் தேற்றிக் கொள்ள வேண்டும். அதைத்தான், ஒரு சிலர்,  Take it Easy! என்று சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே போய்விடுவார்கள்!

அடுத்து வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைய வேண்டும். ஆமாம்,  அது தானே வர வேண்டும்? எத்தனை தோல்விகளைச் சந்தித்தாலும் அது முடியப் போவது வெற்றியில் தானே!

தோல்விகள் தொடர்ந்து வரலாம்! ஆனால் வெற்றி வர ஆரம்பித்துவிட்டால் அதுவும் தொடர்ந்து வரத்தான் செய்யும்! தோல்விகள் வரும்! அதைப் புறந்தள்ளுங்கள்! வெற்றி வரும் அதைக் கொண்டாடுங்கள்!


No comments:

Post a Comment