Monday 31 October 2022

இந்தியர்-சீனராக இருக்கக் கூடாது!

 

நமது 'கல்வியாளர்கள்' என்று சொல்லப்படுகின்ற ஒரு சிலர் செய்கின்ற அழும்புகள் நமக்கு அவர்கள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்தவில்லை.

கல்வியாளர்கள் மரியாதைக்குரியவர்களாக  நாம் பார்க்கிறோம். ஆனால் அவர்களோ தங்களது நடவடிக்கைகளின் மூலம் மரியாதைக்கு உரியவர்களாக இருக்க விரும்பவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

மலேசிய தேசிய பல்கலைக்கழகம் தனது 50-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடவிருக்கின்றது. அதற்கான ஏற்பாட்டில் பட்டதாரி மாணவர்கள் ஆடை அணிகலன்கள் அணிவது பற்றியான வழிகாட்டியையும் பல்கலைக்கழகம் வெளியிட்டியிருக்கிறது.

இந்த பட்டமளிப்பு விழாவில் வழக்கமான உடைகளிலிருந்த சில உடைகள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்திய-சீன பாரம்பரிய உடைகள் அணியக்கூடாது  என பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. அதாவது இந்தியர்கள் அணியும் சாரியும் சீனர்கள் அணியும் Cheongsam  போன்ற பாரம்பரிய உடைகளுக்கு தடை செய்திருக்கிறது ப'கழகம். அதாவது செருப்பு போடுவதை எப்படி தடை செய்திருக்கிறார்களோ அதே போல பாரம்பரிய உடைகள் அணிவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது!

ஒரு வேளை இது போன்ற பாரம்பரிய உடைகள் தேசிய ஒருமைப்பாட்டுக்குத் தடை என்கிற எண்ணமாகவும் இருக்கலாம். வருங்காலங்களில் இந்திய பட்டதாரிகள் இந்தியர்களைப் போல் இருக்கக் கூடாது அதே சமயத்தில் சீனப் பட்டாதாரிகள் சீனர்களைப் போல இருக்கக்கூடாது என்கிற புதிய புதிய அறிவிப்புகளும் வெளியாகலாம்! உங்கள் நிறத்தை மாற்றுங்கள் எனவும் சொல்லலாம்!கல்வியாளர்கள் எப்படியெல்லாம் செயல்படுவார்கள் என சொல்வதற்கில்லை!

 நம்மை வைத்து நல்ல காமடி பண்ணுகிறார்கள் எனத் தெரிகிறது!

உடைகளையெல்லாம் மலாய் மயம் ஆக்க வேண்டும் என்று யூ.கே.எம். நினைத்தால் எல்லாவற்றிலும் அந்த மலாய் மயத்தைக் கொண்டு வரவேண்டும். வேலை வாய்ப்பிலும் அதனைக் கொண்டு வரவேண்டியது தானே?  இந்த உடைகளை வைத்து அப்படி என்ன பெரிய காரியத்தைச் சாதிக்கப் போகிறீர்கள்?

நமக்குத் தெரிந்ததெல்லாம் இவர்களுக்கு நல்ல புத்தியை, நல்ல கல்வியைக்  கொடு இறைவா என்று தான் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது!


No comments:

Post a Comment