Monday 1 April 2024

ஏன் பிரதமர்துறை?

 


'மித்ரா' மீண்டும் பிரதமர் துறைக்கே மாற்ற வேண்டும் என்று சிலர் அடம் பிடிப்பதற்கு  என்ன காரணமாக இருக்கும்?

பொது மக்களுக்கு அது எங்கிருந்தாலும் எந்தக் கவலையுமில்லை.  காரணம் அவர்கள் மித்ரா மூலம் பயன் அடைவதற்கான எந்த வாய்ப்புமில்லை.  அது பற்றி அல்லும் பகலும் கவலைப்படுபவர்களுக்குத்தான்  'பிரதமர் துறையா, ஒற்றுமைத் துறையா'  என்று  வாதிட்டுக் கொண்டிருப்பார்கள்.

மித்ராவின் கடந்த கால வரலாற்றைப் பார்த்தால்  மித்ரா பிரதமர் துறையில் இருந்த போது தான்  பிரபலமான திருட்டுச் சம்பவங்கள் எல்லாம் நடந்தன.  அல்லது அன்றே பேசப்பட்டன.  அப்போது ம.இ.கா.வில் உள்ள பிரபலமானவர்களின் பெயர்களெல்லாம் அடிபட்டன.  ஆனால் அவைகள் எல்லாம்  உண்மையா என்பதற்கு நம்மிடம் ஆதாரம் இல்லை.  பேசப்பட்டது என்னவோ பிரபலமான தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள்  என்பது மட்டும் நமக்குத் தெரியும்.

இப்போது நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மித்ரா பிரதமர் துறைக்கு மாற்றப்பட  வேண்டும் என்கிற அழுத்தம்  ஏன் கொடுக்கப்பட்டு வருகிறது?  நாமும் சந்தேகக்கண் கொண்டு தான் பார்க்க வேண்டியுள்ளது.  மித்ரா பிரதமர் துறையில் இருந்தால்  'கைவைக்க' வசதியாக இருக்குமோ என்று நமக்கும்  சந்தேகம் எழுகிறது.

ஆமாம் கடந்தகால வரலாறு அதனைத்தான்  சொல்லுகிறது.   ஏன் டத்தோ ரமணன் கூட பிரதர் துறையைத்தான் ஆதரிக்கிறார்.   அவரின் ஓர் ஆண்டுகால  சாதனையில்  சில ஓட்டைகளும் விழுந்ததிற்கு  அந்நிறுவனம் பிரதமர் துறையில் இருந்தது தான் காரணம். அதுவே ஒற்றுமைத் துறையில் இருந்திருந்தால் அவரால் அப்படி செய்திருக்க முடியுமா?  முடியாது என்பது அவருக்கே தெரியும்.

ஒற்றுமைத்துறையில் பணம் வீணாவதைத் தடுக்க முடியும்  என்பதை முந்தைய ஒற்றுமைத்துறை அமைச்சர் காட்டிவிட்டுப் போயிருக்கிறார். இன்றைய அமைச்சர் மட்டும்  சும்மா அள்ளிக் கொடுத்து விடுவாரா?  இங்குச் சரியான வழியில் செயல்படும் என்பது தான்  பிரதமரின் முடிவு.

அதனால் பிரதமர் துறையா என்று கேட்டால் 'இல்லை'  என்று தான் பதில் வரும்.  கொஞ்சம் சுருட்டலாம் என்று நினைப்பவர்களுக்குப் பிரதமர் துறை தான்  சிறந்தது. மக்கள் பயன் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஒற்றுமைத்துறை தான் கைகொடுக்கும்.

No comments:

Post a Comment