Friday 13 August 2021

ஜொகூர் சுல்தானுக்கு நன்றி!

 ஜொகூர் சுல்தானுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஜொகூர் மாநில பதினான்காம் சட்டசபை தொடக்க விழாவின் போது சுல்தான் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

"நடப்பிலுள்ள அரசாங்கத்தை கவிழ்க்கும் வேலையில் யாரேனும் ஈடுபட்டால் சட்டசபையைக் கலைத்துவிடத்  தயங்கமாட்டேன்!" என்கிற அவரின் எச்சரிக்கை, கவிழ்க்க முயற்சி செய்யும் எவருக்கும் ஒரு அபாய மணி என்பதைப் புரிந்து கொள்வார்கள்! 

சுல்தான் சொன்னது சரியா, தவறா என்பது பற்றி நமக்குக் கவலையில்லை. நாட்டில் நடக்கும் அநியாயங்களை அவர் பார்த்துக் கொண்டிருப்பது மட்டும் அல்ல "என்னால் அந்த அநியாயங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!" என்கிற - அவரது மாநிலத்தின் மீதான அந்த அக்கறை - வரவேற்கத்தக்கது! போற்றத்தக்கது!

இதோ ஒரு கேள்வி. சுல்தான் சட்டசபையைக் கலைப்பேன் என்று சொன்னாரே அவரை எதிர்த்து யாராவது கேள்வி கேட்க முடியுமா? எந்தக் கொம்பனாவது "சட்டம் இப்படிச் சொல்கிறது! சட்டம் அப்படிச்  சொல்கிறது!" என்று வியாக்கியானம் செய்து கொண்டிருக்க முடியுமா? யாருக்காவது அந்தத்  தைரியம் உண்டா?

இங்கு நாம் சட்டத்தைப் பற்றி பேசவில்லை. நாம் பேசுவதெல்லாம் நாடு நம் கண்முன்னே சீரழிகிறது. கொள்ளையடிக்கப்படுகிறது. தொற்று நோய் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. மக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அரசியல்வாதிகள் ஜாலியாக நாட்டை வலம் வருகின்றனர். அரசியல் பேசுகின்றனர். அரசியல்வாதிகள் விலை பேசப்படுகின்றனர். பல கோடிகள் கைமாறுகின்றன. ஓர் அற்புதமான வாழ்க்கை.

இங்கே மக்கள் வேலையில்லாமல் அவதிப்படுகின்றனர். கையில் காசு இல்லை. இனி எத்தனை நாளைக்கு இந்த  நிலை. எதாவது மாற்றம் வருமா அல்லது வராமலே போகுமா? இது எப்போது மாறும? அல்லது மாறவே மாறாதா?

இப்படி ஒரு சூழலில் நாடு இருந்ததில்லை. இன்றைய நிலை நமக்குப் புதிது. நாம் அனுபவிக்காதது. எந்த ஒரு முடிவும் தெரியாமல் இப்படி இழுத்துக் கொண்டே போனால் நாம் என்ன வாழ்வதா, சாவதா?

நமக்குத் தெரிந்ததெல்லாம் யாருக்கும் - நாடு இன்று இருக்கும் நிலை பார்த்து - அக்கறையில்லை. அக்கறைப்படுவதாகத் தெரியவில்லை. அரசியல்வாதிகளுக்குத்  தான் நாட்டு நிலைமை சாதகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது!

ஜொகூர் சுல்தான் அவர்களுக்கு நமது கோடான கோடி நன்றிகள்!

No comments:

Post a Comment