Tuesday 28 June 2022

சம்பளத்தைக் குறையுங்கள்!

                                             சம்பளத்தைக் குறையுங்கள்!

இன்று பொது மக்கள் படுகின்ற சிரமங்களை  அரசியல்வாதிகள் உணரவில்லை என்பது மிக மிகத் தெளிவாகத் தெரிகிறது!

இதற்கு என்ன காரணமாக இருக்கும்?  ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய படியரிசி அவர்களுக்கு  சரியான நேரத்தில்  கிடைத்து விடுகிறது.  மக்களுக்குத்தான் கிடைப்பதில்லை.

சட்டமன்ற/நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள்,  செனட்டர்கள், அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் அரசியல் மாமேதைகள் -  இவர்களுக்கு மாதந்தோறும் எந்த பிரச்சனையும் இல்லாமல் படி அளக்கப்பட்டு விடுகிறது!  புயலோ வெள்ளமோ, மக்கள் பட்டினி கிடந்தாலும் அரசியல்வாதிகள் மட்டும் பட்டினி கிடப்பதில்லை! அவர்கள் வீட்டு பொம்மனாட்டிகள்  வழக்கம் போல பாரிஸ், லண்டன் நகர்களில்  ஷாப்பிங் செய்வதை நிறுத்துவதுமில்லை!

அதனால் இப்போது என்ன சொல்ல வருகிறோம்? அவர்களைப் பட்டினி கிடக்க சொல்லவில்லை. மக்களின் கஷ்டங்களை அவர்கள்  புரிந்து கொள்ளவில்லை. விலைவாசி ஏற்றங்களைத் தெரிந்துகொள்ளவில்லை.

மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொண்டவர்களாக இருந்தால் ஏன் இப்போதே தேர்தல் நடத்துங்கள் என்கிறார்கள்? மக்கள் கஷ்டத்தைப் புரிந்து கொண்டவர்கள் என்றால் ஏன் தேர்தலுக்காக அரசாங்கத்தை நெருக்குகிறார்கள். தேர்தலுக்கான பணம் என்பது கோடிக்கணக்கில் வரும்! அது யார் பணம்? அது மக்கள் பணம் என்பதைப் புரியாதவர்களா இவர்கள்?

மக்களுக்குப் பண பிரச்சனை இருக்கின்றது. அரசாங்கத்திற்குப் பணப் பிரச்சனை இருக்கின்றது. ஆனால் மக்களைப் பிரதிநிதிக்கும் இந்த அரசியல்வாதிகளுக்குப் பணப் பிரச்சனை இல்லை!  அதனால் மக்கள் எப்படி தியாகம் செய்கிறார்களோ அதே போல இவர்களும் தியாகம் செய்ய வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை.

இவர்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட வேண்டும். மேலும் அவர்களுக்குக் கிடைக்கும் படிக்காசுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். பாதி சம்பளத்தில் அவர்களால் பிழைக்க முடியாதா?  மக்கள் பிழைக்கிறார்களே! அவர்களைவிட குறைவான சம்பாத்தியத்தில் பிழைக்கிறார்களே! மக்களை விட இவர்கள் என்ன உயர்ந்தவர்களா? தொண்டு செய்ய வந்தவனுக்குக் கொண்டை போடுகிற வேலையா நமக்கு!

அரசாங்கம் இது பற்றி யோசிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட அனைவர்களுடைய சம்பளத்தைக் குறைப்பதின் மூலம் ஒரு சில கோடிகளையாவது மிச்சப்படுத்த முடியும். அந்தப் பணத்தை வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். இன்று அரசாங்கத்தின் தேவைகள் அதிகம். இவர்களுக்குத் தண்டச் சம்பளம் என்பது தான் பொதுமக்களின் பொதுவான கருத்து.

சம்பளத்தைக் குறையுங்கள் என்பது தான் அரசாங்கத்திற்கு நாம் விடுக்கும் கோரிக்கை!

No comments:

Post a Comment