Wednesday 15 June 2022

தற்கொலைகள் அதிகரிக்கின்றன!

 

தற்கொலைகள் கூடாது, வேண்டாம் என்று எப்படித் தான் சொன்னாலும் அது என்னவோ தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இவர்களுக்கு வழிகாட்ட எத்தனையோ அமைப்புகள் உள்ளன. அது எல்லாருக்கும் பயன் அளிக்கவில்லை. தற்கொலைக்கு யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது பயன் அளிக்கலாம். ஆனால் ஒரு நிமிடத்தில் முடிவு எடுப்பவர்களுக்கு யாருடைய ஆலோசனையும் எடுபடுவதில்லை!

அதிலும் கடன் பிரச்சனையில் உழல்பவர்களுக்கு யார் என்ன ஆறுதலைச் சொல்லிவிட முடியும்? ஆனாலும் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு என்பது போல கடன் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். புத்திமதிகளைக் கேட்கும் அளவுக்கு அவர்களுக்கு பொறுமை இருப்பதில்லை.

ஆனாலும் தற்கொலை செய்துகொள்வர்களின் தலையாயப் பிரச்சனை என்பது கடன் தொல்லை தான். பெரியவர்களின் தற்கொலைகள் பெரும்பாலும் கடன் சார்ந்த பிரச்சனைகளாகத்தான் இருக்கும். கந்துவட்டி வாங்குபவர்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்கள் உண்டு.

இளசுகள் வேண்டுமென்றால் காதல் தோல்வி என்று சொல்லிக் கொள்ளலாம்.  அதே போல தீர்க்க முடியாத நோயினால் அவதிப்படுபவர்கள்  'இனி மேல் வாழ வேண்டாம்' என்று முடிவெடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலை இடத் தொல்லைகளினால் பாதிக்கப்பட்டு தற்கொலையை நாடுபவர்களும் உண்டு. பரிட்சையில் தோல்வி,   தகுதி இருந்தும்  மருத்துவ கல்வி பயில இடமில்லை , வியாபாரத்தில் தோல்வி, திருமண வாழ்க்கை நினைத்தது போல் அமையவில்லை -  இது போன்ற காரணங்களால் தங்களது உயிரைப் போக்குபவர்கள் பலர்.

உலக சுகாதார நிறுவனம் கடைசியாக   (2019)  எடுத்த புள்ளிவிபரங்களின் படி உலக அளவில் ஒவ்வொரு நாற்பது வினாடிகளில் ஒரு தற்கொலை நடைபெறுவதாக அறிவித்திருக்கிறது. நமது நாட்டில் அதே 2019 - ம் ஆண்டில் மொத்தம்  609 தற்கொலை சம்பவங்கள்  நிகழ்ந்திருக்கின்றன. இது கோவிட்-19 தொற்றுக்கு முன்பு.  தொற்றுக்குப் பின்னர் இது இன்னும் அதிகரித்திருக்கலாம்.

என்ன தான் சட்டங்கள் கொண்டு வந்தாலும், என்ன தான் புத்திமதிகளைச் சொன்னாலும், என்ன தான் அரசு சார்பற்ற நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டினாலும்  தற்கொலை சம்பவங்கள் குறையும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் கண்ணுக்குத் தென்படவில்லை!

No comments:

Post a Comment