விலைவாசி ஏற்றம் என்பது சாதாரண விஷயமல்ல. ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற பிரச்சனை.
பணம் படைத்தவர்களால் வாங்கக் கூடிய சக்தி உண்டு என்றாலும் பொருள்களே சந்தையில் இல்லையென்றால் அவர்களும் அதோகதி தான்!
இப்போது அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டியது: பொருள்களின் விலை நிர்ணயம் செய்வது அடுத்து பொருள்களின் பற்றாக்குறை ஏற்படாமல் கவனம் செலுத்துவது.
முக்கியமான பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் போது மக்களுக்கு அந்த பொருள்களின் விலை ஏற்கத்தக்கது தானா, மக்களுக்கு வாங்கும் சக்திக்கு உட்பட்டதுதானா என்பதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். விலைகள் முதலாளிகள் சொல்லுவது போல நிர்ணயம் செயல்பட்டால் அது பயனீட்டாளர்களுக்குப் பாதகமாக அமையும்.
அரசாங்கம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். விலைவாசிகள் ஏற்றம் பெரும் போது தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு எதுவும் கொடுப்பதில்லை. அவர்கள் வழக்கமான வழிமுறைகளைத்தான் கையாள்வார்கள். ஆனால் அரசாங்கம் ஏதோ ஒரு வகையில் ஊழியர்களுக்கு ஏதோ ஒரு பெயரில் மாதப் படிப்பணம் கட்டாயமாக வழங்கும். அதனையும் அரசாங்கம் விலைகள் நிர்ணயம் செய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டும்.
சில அத்தியாவசிய பொருளகளுக்கு அரசாங்கம் கட்டாயம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குறிப்பாக உணவுப் பொருள்கள் அதிலும் குறிப்பாக குழந்தைகளின் பால்பவுடர்கள், சமையல் எண்ணெய், கேஸ் சிலிண்டர்கள் போன்றவை மிக முக்கியமானவை. இவைகள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளவை.
ஒரு சில கடைக்காரர்கள் இப்போதே பதுக்கள் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். அதுவும் குறிப்பாக பால்பவுடர்கள் முடிந்த அளவு இப்போது வெளிவராமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த மாதிரியான பதுக்கள் வேலைகள் எப்போதும் உள்ளது தான். ஒன்றும் புதிதல்ல.
ஆனால் அதற்குத் தான் அரசாங்க அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நிறுவனங்களிலும் புகுந்து பதுக்கள் செய்யும் வேலைகள் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். சென்ற காலங்களில் இது போன்ற பதுக்கல் வேலைகளில் ஈடுபட்டவர்கள் பலர் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அது தொடர வேண்டும். கடைசி நிமிடத்தில் 'ஆள் பற்றாக்குறை' என்பதாகக் கதை விடக்கூடாது!
எது எப்படியிருப்பினும் அரசாங்கம் விலையேற்றத்தைக் கண்காணிக்க வேண்டும். விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
No comments:
Post a Comment