Sunday 19 June 2022

பட்டதாரிகளை உருவாக்குவோம்!

 


இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு நிறைய கனவுகள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது,   தான் ஒரு பட்டதாரியாக ஆக வேண்டும் என்கிற கனவு தான்.

பட்டதாரி என்பது நிறைவேற்ற முடிந்த கனவு தான். அப்படி ஒன்றும் நிறைவேற்ற முடியாத கனவு அல்ல.

ஒரு சில பிரச்சனைகளினால் நமது மாணவர்கள்  தளர்ந்து போகிறார்கள். மாணவர்கள் என்ன கல்வியைத் தொடர விரும்புகிறார்களோ அதனைப் படிக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை.  நாம் எதை விரும்பவில்லையோ அந்த துறையில் கல்வி பயில நம் மாணவர்கள் மீது திணிக்கப்படுகிறது.  ஏழை மாணவர்களுக்கு வேறு வாய்ப்பில்லை என்பதால்  'கிடைத்ததை வரவில் வைப்போம்'  என்று நினைத்து ஏற்றுக் கொள்கிறார்கள்.  அதனைத் தோல்வியாக  நினைக்காமல் அதுவும் வெற்றியைத் தரும் என்பதாக  நினைத்துச் செயல்பட வேண்டும். அதுவே நம் ஆலோசனை.

எந்த ஒரு கல்வியும் வீண்போகாது. படித்த படிப்பு வீணாகாது.  அந்த படிப்பு உங்கள் உயர்வுக்கு நிச்சயம் உதவும் என்று நம்புங்கள்.

எல்லாமே நாட்டுக்குத் தேவையான கல்வி தான் கற்பிக்கப்படுகின்றன. தேவையற்றவை என்பதாக எதுவுமில்லை.  சமீப காலமாக நான் பார்த்தவை: அனைத்து மாணவர்களுக்கும்  Human Resources பற்றியான கல்விக்குத் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.  நான் அவர்களிடம் ஏன் இதைத் தேர்ந்தெடுத்தீர்கள் எனக் கேட்ட போது 'நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை! அது தான் எங்களைத் தேடி வந்தது!' என்றார்கள்! 

அவர்கள் எல்லாம் திறமையான மாணவர்கள்.  அதனாலென்ன? அதுவும் நாட்டுக்குத் தேவையான கல்வி தான் என்று அவர்களை உற்சாகப் படுத்தினேன்.   இப்போது அவர்கள் பல நிறுவனங்களில் உயர்நிலையில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றிருக்கின்றனர்.  எதுவாக இருந்தால் என்ன?   எது நிற்கும்?  கடைசியில் உங்கள் திறமை தான் வெற்றி பெறும். திறமைக்குத்தான் என்றும் மதிப்பு.

நமது பெற்றோர்களுக்கு நான் சொல்ல வருவது எல்லாம் உங்களது பிள்ளைகளைப் பட்டதாரி ஆக்க முயற்சி செய்யுங்கள். பணம் உள்ளவர்கள்  பிள்ளைகளுக்கு எந்த கல்வி தேவையோ அந்த கல்வி பயில வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். அல்லது பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் உள்நாட்டிலேயே செயல்படுகின்றன. அங்கு அவர்கள் கல்வி பயிலலாம்.  வசதி இல்லாதவர்கள் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில அவர்களை அனுப்பலாம். 

இப்போதெல்லாம் பல நிறுவனங்கள் மேற்கல்வி பயில கடன் உதவிகள் செய்கின்றன. அல்லது உபகாரச் சம்பளங்கள் கொடுக்கின்றன. எல்லா மாநில அரசாங்கங்களும் நிதி உதவிகள் செய்கின்றன. கொஞ்சம் முயற்சி  எடுத்தால் இதுபற்றி நமக்கு நிறைய தகவல்கள்  கிடைக்கும் இப்போது பணம் அவ்வளவு பிரச்சனையாக இல்லை. எல்லா இன மாணவர்களுக்கும்  உதவிகள் கிடைக்கின்றன.

இப்போது படிக்கும் தலைமுறையினர்  பட்டதாரி ஆக வேண்டும் என்று நினைக்கின்றனர். பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க  இளம் வயதிலேயே உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு என்ன திறமை உள்ளதோ அதனைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும்.

பெற்றோர்கள் மனம் வைத்தால் பிள்ளைகளைச் சாதிக்க வைக்க முடியும்!


No comments:

Post a Comment