வாழ்க்கை என்றால் ஆயிரம் மட்டுமா இருக்கும்? இன்னும் ஆயிரம் ஆயிரம் இருக்கும்!
இலாபம் நஷ்டம், இன்பம் துன்பம், வலிகள் வேதனைகள், நல்லது கெட்டது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்! அது போய்க் கொண்டே இருக்கும்!
ஆனாலும் நாம் நல்லவைகளை மட்டுமே எடுத்துக் கொள்வோம். நல்லவைகள் ஆயிரம் இருக்க ஏன் கெட்டவைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்க வேண்டும்? நாம் நேர்மறையாகவே பேசுவோம் எதிர்மறையான சிந்தனைகளைத் தவிர்ப்போம். கனிகள் இருக்க காய்களை ஏன் உண்ண வேண்டும்?
வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கும். எல்லாருக்கும் இருக்கும். தெருக்கோடியில் உள்ளவனுக்கும் இருக்கும். கோடிகளில் புரள்பவனுக்கும் இருக்கும். அவனவன் பிரச்சனை அவனவனுக்குப் பெரிது. ஒருவனுக்கு நூறு வெள்ளி கடன் பெரிது! ஒருவனுக்கு ஆயிரம் கோடி கடன் பெரிது! பொதுவாக அந்த கடனால் இருவருமே நிம்மதியாக இல்லை!
ஒன்றை நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டும். நிம்மதி என்பது ஒரு மனப்பழக்கம். பிரச்சனையை வெற்றிகரமாக எதிர்நோக்குவது என்பது ஒரு மனப்பழக்கம்.
என்ன தான் தலை போகிற காரியமாக இருந்தாலும் 'நம்மால் முடியும்' என்கிற மனப்பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உட்கார்ந்து பிரச்சனைகளை அலச வேண்டும். அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
நெருக்கடிக்களுக்கிடையே மண்டயைப் போட்டு உடைத்துக் கொள்ளக் கூடாது. ஓய்வு எடுத்துக்கொண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படியும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லையா? உங்களிடம் உள்ள ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படியுங்கள். கதைகளைப் படியுங்கள். 'கதைகளைப் படிக்கிற நிலையிலா நான் இருக்கிறேன்' என்று சொல்லித் தப்பிக்க வேண்டாம். கதைகள், நாவல்கள் நம்முடைய பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வைக் கொடுக்கின்றன என்பது உண்மை. கதைகள் நம்முடைய வாழ்வியலைத்தான் பிரதிபலிக்கின்றன என்பதை மறக்க வேண்டாம். எழுத்தாளன் ஏதோ வெட்டித்தனமாக எழுதிக் கொண்டிருக்கிறான் என்று நினைக்க வேண்டாம். அவன் எழுதுவது உங்களின் வாழ்க்கையைப் பற்றி, மக்களின் வாழ்க்கையைப்பற்றி.
எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் ஒரு முறை பேட்டி ஒன்றில் தனது மர்ம நாவல்களைப் படித்து காவல்துறையினர் ஒரு வழக்கில் குற்றவாளியக் கண்டுபிடித்தனர் என்று கூறியிருந்தார். இது ஆச்சரியமாக இருக்கலாம். போலிஸ் மூளை முனைப்பு இல்லாத போது ஒரு எழுத்தாளனின் மூளையைப் பங்குப் போட்டுக் கொள்கிறது! அவ்வளவு தான்!
நமக்குப் பிரச்சனைகள் ஆயிரம் இருக்கும். அதே சமயத்தில் அதற்கான தீர்வும் இருக்கும் என்பதை நாம் நம்ப வேண்டும். தீர்க்க முடியாத பிரச்சனை என்பதாக ஒன்றுமில்லை.
வாழ்க்கை என்பதே ஒரு சமாளிப்பு தான்! எதுவானாலும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment