Monday 27 June 2022

ம.இ.கா. என்ன செய்யலாம்?

 


ம.இ.கா.  இப்போது செயல்பட ஆரம்பித்திருக்கிறது!  ஒரு வேளை தேர்தல் வருவதற்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்!

ஆமாம்,  வரப்போகின்ற 15-வது பொதுத் தேர்தல் என்பது ம.இ.கா.வுக்கு வாழ்வா சாவா பிரச்சனை என்பதில்  சந்தேகமில்லை. எப்படியாவது எதனையாவது செய்து வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்பில் தான் அவர்கள் இருக்கின்றனர்.

நல்லது. அது தான் அரசியல். நான் ஒரு முன்னாள் ம.இ.கா. செயலாளன். அந்த கட்சி மீது இன்னும் இதயத்தின் ஓர் ஓரத்தில் கொஞ்சம் அபிமானம் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது. என்ன செயவது?  நம்பியவர்களை இப்படிச் சாகடித்து  விட்டார்களே  துரோகிகள் என்பதைத் தவிர வேறு ஒன்றும்  செய்ய இயலவில்லை!

ஒன்றை மனதில் வையுங்கள். உங்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது "பக்காத்தான்" அரசாங்கம் ஏன் அதனைச் செய்யவில்லை, ஏன் இதனைச் செய்யவில்லை என்று வீராவேசமாக கேள்விகளை எழுப்பி விடாதீர்கள்! அதைக் கேட்பதே முட்டாள்தனம் என்பது உங்களுக்கே தெரியும்!

அத்தோடு இதனையும் நினைவில் வையுங்கள். இந்தியர்கள் உங்களை மன்னித்து விட்டார்கள் என்பதாக மடத்தனமாக நம்பிவிடாதீர்கள்.  அப்படியெல்லாம் நடந்து விடாது! மைக்கா ஹோல்டிங்ஸ் ஆரம்பம். இப்போது மித்ரா! தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது! நின்ற பாடில்லையே!  அப்புறம் எங்கே மன்னிப்பு?

இதுவரையில் நீங்கள் இந்திய சமூகத்திற்கு எதையும் செய்யவில்லை  என்பது உங்களுக்கே தெரியும். இனிமேல் அப்படி என்ன செய்துவிடப் போகிறீர்கள் என்பதும் உங்களுக்கே தெரியும். நீங்கள் எதையும் செய்ய மாட்டீர்கள் என்பது இந்திய சமூகத்திற்குத் தெரியும். 

உங்களுக்குத் தேவையானதெல்லாம் இன்னொரு 'மித்ரா', அவ்வளவு தான்! அது ஒன்றே போதும்! இந்தியர்களைத்  தொழில்துறையில் முன்னேற்றி விடுவீர்கள்!

சமுதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை! ம.இ.கா. வில் யாரையாவது ஒருவரை 'இவர் நல்லவர்'  என்று அடையாளம் காட்ட முடிகிறதா? முடியவில்லையே!எல்லாருமே பசுத்தோல்  போர்த்திய புலிகளாகத்தான் இருக்கிறீர்கள்!

உங்களுடைய பிரச்சாரத்தை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள். பணம் கொடுத்து,  பொருட்களைக் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்று கணக்குப் போடாதீர்கள். மாட்டிக்கொள்வீர்கள்!

என்ன செய்யலாம்! எப்படி செய்யலாம்! என்பதை  நீங்களே யோசியுங்கள்!

No comments:

Post a Comment