Wednesday 22 June 2022

செலவுகளைக் குறையுங்கள்!

 

வரப்போகின்ற இன்னும் ஒருசில மாதங்களில் உலகப் பொருளாதாரம் மிகவும் இக்கட்டான ஒரு நிலையை அடையும் என்று  குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. நமது நாடும் அதற்கு விதிவிலக்கல்ல.

 இந்த நேரத்தில் நமது தமிழ் மக்கள்  கெட்டிக்காரத்தனமாக, பொறுப்பாக  நடந்து கொள்ள வேண்டும் என்பதே நமது நோக்கம்.

நாம் பல வேளைகளில் மிகவும் அலட்சியம் காட்டுபவர்களாக இருக்கிறோம். அதுவும் பண விஷயத்தில் நாம் அக்கறைக்  காட்டுவதே இல்லை.  பொருட்களை பயன்படுத்துவதிலும் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. பணத்தைச் செலவழிப்பதிலும் பொறுப்பில்லாத் தனம் அதிகம்!  வழக்கம் போலவே அக்கறையற்ற ஒரு சூழலில் தான் நமது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது!

சான்றுக்கு ஒன்றைக் குறிப்பிடலாம். திருமண விருந்துகளுக்குப் போகிறோமே நாம் பொறுப்பாக நடந்து கொள்கிறாமா என்பதை மனதில் கைவைத்துச் சொல்லுங்கள்?   நம்மைப் போல எந்த ஜீவராசிகளும் இப்படி அநாகரிகமாக  நடந்து கொள்வதில்லை. அந்த அளவுக்கு உணவுகளை நாம்  வீணடிக்கிறோம்!  இதனை மற்றவர்கள் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. நமக்குத் தேவையான உணவு, நமது குழந்தைகளுக்குத் தேவையான உணவு, அதன் அளவு குழந்தைகளின் அளவு  - இவைகள் எல்லாம் நமக்குத் தெரியாமலில்லை. ஆனாலும்  நமது வன்மத்தை உணவில் காட்டுகிறோம்!

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். விருந்துகளில் என்ன செய்கிறோமோ அதைத்தான் வீடுகளிலும்  செய்கிறோம். பழக்கங்களை எளிதில் கைவிட்டு விட முடியாது! பெரியவர்கள் காட்டும் பாதையில் தான் குழந்தைகளும் பயணம் செய்வார்கள்!

விருந்து என்பது ஒரு சான்று தான். வீடுகளில் நாம் என்ன என்ன கூத்தடிக்கிறோம், தெரியுமா? சிக்கனம் என்பதே நமக்கு அந்நியமாகப் போய்விட்டது. சிக்கனமாக இருப்பவர்களையும் கஞ்சன் என்று முத்திரைக் குத்துகிறோம். மறந்து விடாதீர்கள். சிக்கனம் தான் உங்களைக் காப்பாற்றும். ஆபத்து அவசர காலங்களில் நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் பணம் தான் உங்களுக்கு உதவும்.  கஷ்ட காலங்களில் மற்றவர்களிடம் போய் நாம் பிச்சை எடுக்க முடியாது. அண்ணன் தம்பிகளுக்கு அவர்களுடைய பிரச்சனைகள். அவர்கள் எங்கே உங்களுக்கு உதவுவது? உதவும் நிலையில் அவர்கள் இருந்தாலும் உதவக் கூடிய வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கும்.

நிலைமைகளைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு நாம் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது. கஷ்ட காலம் என்பது அனைவருக்கும் தான். உங்களுக்கு மட்டும் அல்ல.

உங்கள் செலவுகளைக் குறையுங்கள். நீங்கள் குடிப்பதைக் குறையுங்கள். சிகரட் பிடிப்பதை நிறுத்துங்கள். வெளியூர் போகும் பயணங்களைக் குறையுங்கள். காரின் பயன்பாட்டைக் குறையுங்கள்.

ஒன்று சொல்வேன். இப்போதே உங்கள் சிக்கனத்தை ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் குடும்பங்களை நினைத்துப் பாருங்கள். அனைவருக்கும் சாப்பாடு வேண்டும்.  பிள்ளைகள் படிக்க வேண்டும். படிக்காவிட்டாலும் சாப்பாட்டை நிறுத்த முடியாது!

கடைசியாக, செலவுகளைக் குறைத்து சிக்கனமாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள்! கையேந்துதல் வேண்டாமே!

No comments:

Post a Comment