பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மரண தண்டனைப் பற்றியான அறிவிப்பைப் படித்த போது, மேலே சொன்னது போல "வரும்! ஆனா வராது!" என்கிற என்னாத்த கண்ணையாவின் பிரபலமான வசனம் நினைவுக்கு வராமல் போகாது!
ஆனாலும் பிரதமர் என்ன சொல்ல வருகிறார் என்றால் இனி கட்டாய மரண தண்டனை என்பது இல்லை. ஒரு குறிப்பிட்ட வழக்கில் மரண தண்டனைத் தேவை என்று நீதிபதிகளுக்குத் தோன்றினால் நீதிபதிகள் அதனைப் பயன்படுத்தலாம். இப்படிச் சொல்லி நம்மைத் தேத்திக் கொள்ளலாம்: அதாவாது மரண தணடனை இல்லை என்பது 95% விழுக்காடு என்றால் வழக்கின் தீவிரம் கருதி 5% விழுக்காடு நீதிபதிகள் முடிவுகளை எடுக்கலாம். வராது என்பது அதிகம். வரும் என்பது மிகக்குறைவு.
இப்போதும் இதற்கு முன்னரும் என்ன வித்தியாசம்? இதற்கு முன்னர் நீதிபதிகள் ஒரே ஒரு முடிவைத்தான் எடுக்க முடியும். அது மரண தண்டனை மட்டும் தான். இப்போது அது தேவை என்று நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட வழக்கில் நினத்தால் மட்டுமே மரண தண்டனை என்கிற முடிவை எடுக்க முடியும். அது வழக்கின் தீவிரத் தன்மையைப் பொறுத்தது.
பொதுவாக இப்போது மரண தண்டனையைப் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் எதிர்க்கிறார்கள் என்பது மட்டும் அல்ல அதனைக் காட்டுமிராண்டித் தனமான தண்டனை என்பதாக உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது.
குற்றம் புரியும் ஒருவனுக்கு, அவனுக்குத் தக்க சிறைத்தண்டனைக் கொடுக்க சட்டத்தில் வழியுண்டு. அதற்காகத்தான் சிறைகளைக் கட்டி வைத்திருக்கிறோம். சிறை எந்த அளவுக்குக் குற்றவாளிகளை மாற்றுகிறது என்றால் அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க அவர்களை அது தடுக்கிறது. அதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம்.
கட்டாய மரண தண்டனை என்பது ஆகக் கடைசியான ஒரு முடிவாக இருக்க வேண்டும். "வேறு வழியே இல்லை, இவன் சாவதைத்தவிர! உயிரோடு இருந்தால் மக்களுக்கு மேலும் ஆபத்து!" என்கிற நிலையில் ஒரு குற்றவாளி இருந்தால் நீதிபதி தனது கடசி ஆயுதமாக மரண தண்டனையைப் பயன்படுத்தலாம்.
மரண தண்டனை வராது! அளவு மீறினால் வரும்!
No comments:
Post a Comment