Saturday 25 June 2022

எது முதன்மையானது? (முன்னேறுவோம்)

 

நமது குடும்பங்களில் எதனை நாம் முன்னிலைப்படுத்துகிறோம்? குடும்பத்தலைவரும், குடும்பத்தலைவியும் எது தங்களுக்கு முக்கியம் என்று கருதுகிறார்களோ அதனை முன்னிலைப்படுத்துவது தான் வழக்கம்.

ஆனாலும் இப்போது நமது குடும்பங்களில் ஒன்றைச் சரியாகவே  புரிந்து கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகளின் கல்வி தான் நமது பிள்ளைகளின்  எதிர்காலம் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் கல்வியை  முன்னிலைப் படுத்துகிறார்கள் என்பது  நமக்கு மகிழ்ச்சியே!

அதிலும் வருத்தப்பட வேண்டிய விஷயம் எல்லாருக்கும்  கல்வியின் முக்கியத்துவம் புரிவதில்லை.  தொழிற்சாலைகளில் ஏதோ ஓர் ஆயிரம் வெள்ளி சம்பாதிக்க முடியும் என்றால்  அதனைப் பெரிதாக நினைக்கும் பெற்றோர்கள் இந்த காலத்திலும் உண்டு. குறிப்பாக  ஒருசில  தமிழ்ப் பெற்றோர்கள் சம்பாத்தியத்திற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  சம்பாதிக்கும் அந்தப் பணத்தை அப்படி என்ன சேர்த்து வைக்கவா போகிறார்கள்? அது எங்குப் போகும் என்பதை நாம் யூகிக்கலாம்!  

 தொழிற்சாலைகள் பல வேலைகளைக்  குத்தகைக்கு விட்டிருப்பார்கள்.  இப்படிக் குத்தகை எடுப்பவர்கள் தான் பல சமயங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள்! இருந்தாலும் எல்லாம் மாறி வருகின்றன. பெற்றோர்களும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இப்போது நிறையவே நமது பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதில் நமக்கும் மகிழ்ச்சியே!

கல்வி ஏன் முக்கியம்?  பெற்றோர்களுக்குப் பெருமை கிடைக்கும் அல்லது பிள்ளைகளுக்குப் பெருமை கிடைக்கும் எனபதற்காகவா? அல்ல! அல்ல!  வீழ்ந்து கிடக்கும் சமுதாயத்தை நிமிர்ந்து நிற்க வைப்பது தான் கல்வி. காலங்காலமாக அடிமை வாழ்க்கை வாழும் ஒரு சமுதாயத்தை  தூக்கி நிறுத்துவது தான் கல்வி.

"மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்!" என்பது போல  கல்வி ஒன்றினால் மட்டுமே அது முடியும். கற்றவனுக்குச் செல்கின்ற  இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்கிறார்களே அது தானே உண்மை.

குடும்பத்தை வழி நடத்த, நாட்டையே வழிநடத்த எது தேவை? கல்வி தானே! கல்வி கற்பதில் நாம் இன்னும்  பின் தங்கியவர்களாகத்தான்   இருக்கிறோம். எதிர்பார்த்த அளவு இல்லை.கல்விக்கூடங்களை விட தொழிற்சாலைகள் தான் நமது இளைய தலைமுறையை ஈர்க்கின்றது!

பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். இளம் பிராயத்திலேயே பிள்ளைகளிடம் "நீ டாக்டராக வேண்டும்! நீ லாயர் ஆக வேண்டும்! நீ என்ஜினியர் ஆக வேண்டும்! நீ தொழிலதிபர் ஆக வேண்டும்!" என்று சொல்லிச்சொல்லி அவர்களை வளர்க்க வேண்டும். அது மனதில் அப்படியே நிற்கும்.

எதிர்மறையான செய்திகள் குழந்தைகளின் பாதையை மாற்றிவிடும்.

நமது சமுதாயத்திற்கு, தமிழர் சமுதாயத்திற்கு கல்வி தான் முதன்மையானது!

No comments:

Post a Comment