Thursday 23 June 2022

இல்லையென புலம்பாதீர்கள்! (முன்னேறுவோம்)`

 

               
நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஒன்றுமே சேர்த்து வைத்துவிட்டுப் போகவில்லையா?

எனது நண்பர் ஒருவர் இப்படித்தான்  சொல்லிவிட்டுப் புலம்பினார். நான் அவரிடம்,  'அவர் உங்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்திருக்கிறாரே அது போதாதா? என்றேன்.

நம்மில் பலர் இவரைப் போன்ற நிலையில் தான் இருக்கிறோம். தோட்டப்புறங்களிலே தோட்டப்பாட்டாளிகளாக வாழ்ந்த ஒரு சமுதாயத்திலிருந்து கல்வி கற்று வருவது என்பது சாதாரண விஷயமல்ல. தோட்டப்பாட்டாளிகளின்  பிள்ளைகள் கல்வி கற்பதை தோட்ட நிர்வாகத்தில் உள்ளவர்களே விரும்புவதில்லை.  நான் வளர்ந்த காலகட்டம் அப்படித்தான் இருந்தது.

'வேலைக்குப் போனா அவனும் சம்பாதிப்பான்! உனக்கும் உதவியா இருக்கும்!'  என்று ஐயா சொன்னால் அதனை யாராலும் மறுக்க முடியாது! கங்காணியாரும் 'டேய்! அவன் படிச்சி என்னா கலக்டரா ஆகப்போறான்?  அதான் ஐயா சொல்லிட்டாருல்ல! வேலைக்கு அனுப்புடா!' விவரம் அறியாத அப்பா 'ஐயா,  சரியாத்தான் சொல்லுவாரு!'  என்று அடுத்த நாளே வேலைக்கு அனுப்பிவிடுவார்!  அப்பாவுக்குத் தெரியும், ஐயா வீட்டு மகன் பட்டணம் போய் படிக்கிறான் என்பது ஆனால் நமக்கு அந்த வரம் இல்லை! அதற்கு மேல் அவர் சிந்திப்பதில்லை!

இந்த நிலையில் தான் ஏதோ ஒரு சில பாட்டளிகளின் பிள்ளைகள் படித்து முன்னேற முடிந்தது. அவர்கள் கொடுத்த அந்த கல்வியே பெரும் சொத்து. அப்போது கொடுக்கப்பட்ட அந்த கல்வி பலரை வாழவைத்தது. பள்ளி ஆசிரியர்கள் எல்லாம் அந்த காலகட்டத்தில் தான் நிறைய உருவாகினர். பலர் அரசாங்க வேலைகள், தோட்ட நிர்வாகத்தில், தொழிற்சாலை நிர்வாகங்கள் - இப்படித்தான் முன்னேற்றம் படிப்படியாக அமைந்தது.

இந்த நிலையில் 'எனக்கு ஒன்றுமே இல்லை!' என்று புலம்புவது முட்டாள்தனம் அல்லவா?  ஒன்றுமில்லா ஏழைகளுக்குக் கல்வி தான் மிகப் பலம் வாய்ந்த ஆயுதம். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.  அதனை வைத்துத்தான்  பலரின் முன்னேற்றம் அமைந்திருக்கிறது. பலர் சக்தி வாய்ந்தவர்களாக மிளிர்ந்திருக்கிறார்கள்.

எனது பெற்றோர் எனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை என்பதாக புலம்பாதீர்கள். கல்வியே மிகப்பெரிய ஆயுதம். அதனை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அந்த கல்வியை வைத்து உங்களால் முன்னேற முடியவில்லை என்றால் அது பெற்றோர்களின் தவறு அல்ல. நீங்கள் அறிவைப் பயன்படுத்தவில்லை என்பது தான் பொருள்.

இல்லை! இல்லை! என புலம்பாதீர்கள்! கிடைத்ததை வைத்துக் கொண்டு முன்னேறும் வழியைப் பாருங்கள். ஒன்றுமே இல்லாத, வசதிகளே இல்லாத ஒரு காலகட்டத்தில் அன்றைய பெற்றோர்கள் சாதித்ததைக் கூட நம்மால் சாதிக்க முடியவில்லையென்றால் இருந்தும் என்ன பயன்?

புலம்பினால் சாதனைகள் இல்லை! மகிழ்ச்சியோடு  சாதனைகளை உருவாக்குங்கள்!

No comments:

Post a Comment