Monday 6 June 2022

ஏழை மனதை மாளிகையாக்கி...!

 

கவியரசர் கண்ணதாசன் தான் பாடினார்.  "ஏழை மனதை மாளிகையாக்கி......" அது போதும்!

கவிஞர் பார்க்காத பணமா?  அவர் மலேசியா வந்த போது அவர் சொன்ன ஒரு வார்த்தை இன்னும் எனது ஞாபகத்தில் இருக்கிறது. "இந்தியாவில் எழுதி சம்பாதித்தவர்களில்  பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவும்  நானும் தான் முதலிடத்தில் நிற்கிறோம்" என்று அவரால் சொல்ல முடிந்தது என்றால்  அவருடைய வருமானம் எவ்வளவு இருந்திருக்கும் என்பதை நீங்களே கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள்.

சமீபத்தில் கவிஞரின் மகன் பேட்டி ஒன்றில் அவரின் தினசரி வருமானம் எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் வரை இருக்கும் என்பதாகக் கூறியிருந்தார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அப்போதுள்ள அதன்  மதிப்பைப பாருங்கள். இன்றைய நிலையில் ஒப்பிட வேண்டாம்!

இதனை ஏன் நான் சொல்லுகிறேன் என்றால் அவர் மாடமாளிகையில் பிறக்கவில்லை. காரைக்குடி என்றாலே செட்டியார் சமூகம் வாழும் பணக்கார ஊர் என்று தான் தோன்றும். ஆனால் அவரின் நிலை அப்படி இல்லை.  அவரைக் காப்பாற்ற முடியாத ஏழைப் பெற்றோர்கள் அவரை மற்றவர்களுக்குத் தத்துக் கொடுத்துவிட்டனர். அதாவது 'ஏழாயிரம் ரூபாய்க்கு அவரை விற்றுவிட்டனர்' என்கிறார் அவரது மகன்!

கண்ணதாசனின் வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பம். ஏழ்மை நிலைமையில் இருந்தவர். அவர் தனது எழுத்தின் மீது உள்ள நம்பிக்கையில் எழுத வந்தவர். படிப்போ வெறும் எட்டாம் வகுப்பு வரை. அதற்கு மேல் படிக்க வழியில்லை. பின்னர் திரை உலகில் புகுந்து பல சிரமங்களுக்கிடையே வெற்றிக்கொடி நாட்டியவர்.

அவர் ஏழையாகத்தான் பிறந்தார் என்றாலும் அவர் மனதளவில் தன்னை ஏழையாக நினைக்கவில்லை.  தன் அடிமனதில் அவர் ஏழையாக இருக்கவில்லை.  அவர் மனதை எப்போதும் மாளிகையாகவே வைத்திருந்தார்! அது தான் கவிஞரின் சிறப்பு.

நமது இன்றைய நிலைமை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இருந்து விட்டுப் போகட்டும். ஏழை என்றால் ஏழைதான், வேறு என்ன சொல்ல? ஆனால் ஏழ்மையை நம்மால் மாற்ற முடியும். ஏழ்மை என்று சொல்லி நாம் முற்றிலுமாக ஏழ்மைக்கு  அடிமையாகிவிடக் கூடாது. நம்மில் பலர் இங்கே  தான் தோல்வி அடைந்து விடுகிறோம்.

"இறைவன் விதித்தது! ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!" என்று எப்போதும் இறைவனைக் குற்றம் சொல்வபவர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியே சொல்லிச் சொல்லி தங்களது வாழ்க்கையை மாற்றியமைக்க முயற்சி செய்ய மறுப்பவர்கள்.   அதே சமயத்தில் " உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, மலர்கள் மலர்வது எனக்காக" என்று ஓடி ஆடி இறைவனை வாழ்த்தி தங்களை உயர்த்திக் கொண்டு வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!

நீங்கள் ஏழையாகவே  இருக்க வேண்டும் என்பது இறைவன் விதித்தல்ல! அது நீங்கள் விதித்தது, நீங்கள் விதைத்தது. நீங்கள் போட்ட விதை  அது மரமாகி இப்போது உங்களை முன்னேறாதபடி அமுக்கிவிட்டது!

எல்லாவற்றுக்கும் நமது மனமே காரணம். மனம் போல் வாழ்வு என்று தானே சொன்னார்கள்?  நீங்கள் ஏழை என்பதை மனதிலிருந்து அகற்றிவிட்டு 'நான் பணக்காரன்' என்கிற  எண்ணத்தை உள்ளே புகுத்துங்கள். அப்படி ஓர் எண்ணத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டால் உலகமே உங்களைப் பணக்காரனாக்கி விடும்! அதற்கான வழிகளைக் காட்டும்.

அதைத்தான் கவிஞர் சொன்னார்: ஏழை மனதை மாளிகையாக்கு என்று. அதன் பின்னர் பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் வரும் மாற்றத்தை!

No comments:

Post a Comment