Monday 13 June 2022

வெற்றி தான் நமது இலக்கு!

 

தோல்வியாளர்கள் என்றுமே வெற்றி பற்றி சிந்திப்பதில்லை!

ஒரே காரணம் தான். அவர்கள் முழுமையாக தோல்விகளைப் பற்றியே பேசிப் பழகிவிட்டனர்! வீட்டிலும் சரி வெளியேயும் சரி அவர்களது பேச்சுக்கள் அனைத்தும் தோல்விகள் பற்றியாதகவே  இருக்கும்.

முடிந்தவரை இவர்கள் தோல்விகளைப் பரப்புபவர்களாகவே இருப்பார்கள். மற்றவர்களையும் தோல்வியாளர்களாகவே பார்ப்பார்கள்.  தங்களைப் போலவே மற்றவர்களும் தோல்வி அடைவது திண்ணம் என்பது தான் அவர்களது எண்ணமாக இருக்கும்.

ஒரு உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.  தோல்வி என்பது எப்படி நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து விட்டதோ  அதே போல வெற்றி என்பதையும் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து விட முடியும். அது மிக எளிது.

எப்போது நம் மனதில் தோல்வி எண்ணங்கள் வருகின்றனவோ அப்போது அதனையே வெற்றி எண்ணங்களாக மாற்றி விட வேண்டும். வெற்றி எண்ணங்களை ஒரு பயிற்சியாகவே நாம்  செய்ய பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரு தோல்வியைச் சந்திக்கும் போது அது தோல்வி என்பதை விட அதில் கிடைத்த வெற்றி என்ன என்பதை ஆராய வேண்டும். தோல்வி என்பதை முற்றாக மறந்து விட்டு அங்குக் கிடைத்த வெற்றியை மட்டும் சிந்திக்க வேண்டும்.

நாம் ஏதோ ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் அதைப் பார்த்து உலகம் சிரிக்கலாம். பலர் சிரிப்பர். ஆனால் நாம் அதனைத்  தோல்வியாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. மனதளவில் நாம்  வெற்றியாளர் என்கிற எண்ணத்தை  உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்தத் தோல்வியிலும் ஒரு சில படிப்பினைகளை நாம் கற்றிருப்போம். அது தான் வெற்றி என்பது.

வெற்றி எண்ணங்களே நமக்கு உயர்வைக் கொடுக்கும். தோல்வி எண்ணங்கள் நம்மை எந்தக் காலத்திலும் தலை நிமிராமல் செய்துவிடும். இன்று நம் சமுதாயத்தினரிடையே பெரும் பிரச்சனை என்பது தோல்வி மனப்பான்மை தான். நம் இளைஞர்கள் கூட விதிவிலக்கல்ல.

எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல்  'இது கிடைக்காது! அது கிடைக்காது!' என்று அக்கப்போராக எதையாவது சொல்லி வீழ்ச்சியடைந்து விடுகின்றனர்! முயற்சியே செய்யாமல் ஒரு முடிவுக்கு வந்து விடுகின்றனர்! அத்தோடு தோல்வி மனப்பான்மையையும் சேர்த்துக் கொள்கின்றனர்.

எல்லாக் காலங்களிலும் வாய்ப்புக்கள் கிடைத்துக் கொண்டு தான்  இருக்கின்றன. முற்றிலுமாக நம்மை யாரும் ஒதுக்கிவிடவில்லை.  அது முடியாத காரியம். பிரச்சனை என்னவென்றால் நம்மை நாமே  ஒதுக்கிக் கொள்கிறோம்!

அது என்ன தான் பிரச்சனை என்றாலும் வெற்றி தான் இலக்கு என்று முன் கூட்டியே தீர்மானமாக இருங்கள்.

நமது மலேசிய தமிழ்ப்பெண்கள் பல துறைகளில் இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்களே அவர்களால் எப்படி முடிந்தது? அவர்களுக்கு வெற்றி மட்டும் தான் இலக்கு. நம்மை யாருடனும் ஒப்பிட வேண்டிய அவசியமில்லை.  நாம் வெற்றி பெற வேண்டும்! அதுவே நமது இலக்கு! அவ்வளவு தான்!

No comments:

Post a Comment