Wednesday 8 June 2022

எங்கே தவறு நடக்கிறது?

                              Islamic Affairs Minister  (PM's Department) -  Datuk Idris Ahmad

பிரதமர் துறையின்  இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ இட்ரிஸ்  அமாட் சொன்ன கருத்தை நாம் ஏற்றுக்கொள்வதில் தயக்கமேதுமில்லை. அப்படி என்ன சொன்னார்?

"மற்ற சமயத்தினரை அவமதிப்பதையோ, வெறுப்பை விதைப்பதையோ இஸ்லாம் மதத்தின்  போதனைகளும்,  கொள்கைகளும்  தடுக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு  முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டும்" என்பது தான் அவரின் செய்தி.

ஆக, இஸ்லாமிய சமய அறிஞர் ஜாகிர் நாயக் அவரின் சீடர் ஸம்ஸூரி வினோத் போன்றவர்கள் பிற மதங்களைத் தாக்குவது,  மக்களிடையே அமைதியின்மையைத் தோற்றுவிப்பது  எந்த விதத்திலும் இஸ்லாமியக் கொள்கைகளைப் பிரதிபலிக்கவில்லை என்பதையே டத்தோ இட்ரிஸ் அவர்கள் சொல்லாமல் சொல்லுகிறார்.

இந்தியாவில் இந்து மதம் பிற மதங்களுக்கு எதிரானதல்ல என்பதாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி சமீபத்தில் இஸ்லாமிய நாடுகளுக்கு உறுதி அளித்திருக்கிறது. சமீப காலங்களில் இந்தியாவில் முஸ்லிம்கள் பலமுனைகளிலிருந்து தாக்கப்படுகின்றனர்.  பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. அரசாங்கம் அதனைத் தனிப்பட்ட மனிதர்களின் தாக்குதல் என்பதாகக் கூறுகிறது. அது இந்து மதத்தின் கோட்பாடுகள் அல்ல என்பது தான் அவர்களது விளக்கம்.

புத்த மதத்தைப் பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம். மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதையே அது ஆதரிக்காத மதம்  ஸ்ரீலங்காவின் அதிகாரபூர்வ மதம் புத்தமதம். அந்நாட்டில் ஆட்சியாளர்களுக்குச் சமமானவர்கள்  என்றால் அது புத்த பிக்குகள் தான். ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்ததற்குக் காரணமானவர்கள்  அந்தப் புத்த பிக்குகள்!

இப்போது ரஷ்ய-உக்ரைன்  சண்டையின் உக்கிரம் இன்னும் தணிந்தபாடில்லை. இரண்டுமே  கிறிஸ்துவ நாடுகள் தான்.   இந்த சண்டையின் மூலம் உக்ரைன் மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாகப் போக வேண்டிய நிலைமை. தங்களது சொந்த நாட்டில்  உடைமைகளை இழந்து அந்நிய நாடுகளுக்கு ஆதரவற்ற நிலையில் பிழைத்தால் போதும் என்கிற நிலை.

கிறிஸ்துவம் அன்பைப் போதிக்கும் மதம். ஆனால் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்  அன்பு தடுமாறுகிறது! உலகம் இன்று யாரைக் குற்றம் சொல்லுகிறது? உலகில் நடக்கும் பல பிரச்சனைகளுக்குக் காரணம் கிறிஸ்துவ நாடுகள்  தான் என்கிறது உலகம்!

இதற்கு என்ன தான் முடிவு? ஒவ்வொரு மதமும் நல்லவற்றைத் தான்  போதிக்கின்றன. எங்கே தவறு நடக்கிறது? மதங்களைக் குறை சொல்ல ஒன்றுமில்லை. மதங்களைப் பின்பற்றுவோர் தான் குற்றவாளிகளாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடும் கடவுளே என்று தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது!

No comments:

Post a Comment