Thursday 16 June 2022

மாணவர்களே! நீங்கள் நமது பெருமை!

 


SPM தேர்வில் நமது மாணவர்களின் தேர்ச்சி விகிதம் சிறப்பாக இருப்பதாக  பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நல்ல செய்தி தான்.  இந்தியர்களின் எதிர்காலம் என்பது கல்வியில் மீது நாம் காட்டும் ஆர்வத்தில் தான் இருக்கிறது. சந்தேகமில்லை!

இன்று உலக அளவில் நாம் பல சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம் என்றால் அவை அனைத்தும் கல்வியின் மூலம் பெறப்பட்டவை தான்.  அதே சமயத்தில் நாம் உழைப்புக்குக் கொடுக்கும்  மரியாதையும் அடங்கும்.

SPM என்பது முதல்படி தான். இன்னும் நிறையவே சாதனைகளைச் செய்ய வேண்டி உள்ளது  அடுத்து மெட்ரிகுலேஷன் அல்லது Form VI, கல்லூரி,  பல்கலைக்கழகம் என்று நீண்ட வரிசை காத்துக் கொண்டிருக்கிறது. அதெல்லாம் உங்களுக்குப் பிரச்சனை அல்ல. இடம் கிடைத்தால் சாதனைகள் புரிய நமது மாணவர்கள் என்றென்றும் தயார். வாய்ப்புக் கொடுத்தால் நம்மால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை.

நமது மாணவர்களின்  இளம் வயது கனவு என்பது மருத்துவம் தான். நல்லது.  அதனையும் படிக்க பல வழிகள் உள்ளன. உள்நாட்டில் தகுதி அடிப்படை என்பது கணக்கில் இல்லை. அதனால் உள்நாட்டில் மறுக்கப்பட்டாலும்  வெளிநாடுகளில் படிக்க வாய்ப்புக்கள் நிறையவே உள்ளன. எல்லாம் பணம் தான்!  ஆனாலும் இன்னும் பல வழிகளில் மாநிலங்கள் தோறும் உதவிகள் கிடைக்கின்றனர். கல்வி உதவி அல்லது கல்விக்கடன் உதவி என்று பல நிறுவனங்கள்  கொடுக்கின்றன. இவைகளை எல்லாம்  கடைசி நிமிடத்தில் தேடிக் கொண்டிருப்பதைவிட முன் கூட்டியே தயாராக வைத்திருங்கள். கையில் பணம் இல்லையென்றால்  பல வழிகளைக் கையில் வைத்திருப்பது நல்லது தானே.

ஒரு சிலருக்கு மீண்டும் தேர்வு எழுதி குறைந்துபோன புள்ளிகளை நிறைவு செய்ய வேண்டிய சூழல் இருக்கலாம். தவறில்லை.  தோல்வி என்று ஏற்றுக் கொள்ளாதீர்கள். அதுவே வெற்றியின் அறிகுறி என்பதாக உங்கள் எண்ணத்தை மாற்றி அமத்துக் கொள்ளுங்கள். எதுவும் தோல்வி இல்லை!

இன்னும் பல மாணவர்கள் குறைவான புள்ளிகளே எடுத்திருப்பார்கள். ஏன்? தேர்வு தோல்வியில் முடிந்திருக்கும். பல காரணங்கள். 

ஆனால் அத்தோடு அனைத்தும் அணைந்து விடுவதில்லை.  கொஞ்சம் முயற்சிகள் எடுத்தால் தொழிற்கல்விகள் உண்டு. அங்கும் உயர்கல்விகள் உண்டு. அங்கும் கல்லூரிகள் வரை போகக் கூடிய சாத்தியங்கள் உண்டு. வெறும்  SPM  தேர்வை வைத்துக் கொண்டு அலைவதை விட சான்றிதழ், டிப்ளோமா என்று கையில் வைத்திருப்பது இன்னும் பலம். 

வழிகள் பல உள்ளன.  தகுதிகளை வளர்த்துக் கொள்ள  நிறையவே வாய்ப்புக்கள் உள்ளன. அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை என்று புலம்புவதை விட  இருக்கின்ற அரசாங்கத்தின் வசதி வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம். மலாய் இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சீன இளைஞர்கள் அதனையே தொழிலாக மாற்றியமைத்துக் கொள்கிறார்கள். நமக்கு மட்டும் என்ன குறை?  தொழிலாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலையாகவும் மாற்றிக் கொள்ளலாம்.

மாணவர்களே! நீங்கள் இந்த சாமுதாயத்தின் பெருமைக்குரியவர்கள். வெற்றி உங்கள் கையில்!

No comments:

Post a Comment