சாதனை என்றாலே ஒரு சிலரே நமக்கு ஞாபகத்திற்கு வருகின்றனர். அதாவது பெரிய சாதனை புரிந்த தமிழர் என்றால் அது சுந்தர் பிச்சைதான். பிச்சை என்கிற பெயரில் உலக அளவில் பிரமாண்ட கூகுள் நிறுவனத்தின் தலைமை பீடத்தில் இருப்பவர் இவர் ஒருவர் தான்.
மலேசியாவில் கூட பெரும் சாதனைகள் படைத்த தமிழர்களைச் சமீப காலங்களில் பார்க்கிறோம். பெரும்பாலும் அவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் என்பதில் நமக்குப்பெருமை தான்.
இந்த சாதனைகளெல்லாம் நமக்குப் பெருமை என்பது உண்மை. ஆனால் அது பற்றி நான் பேசப் போவதில்லை.
மலேசிய நாட்டில் நமது தமிழ் மக்கள் செய்ய வேண்டிய சாதனைகள் உண்டு. ஒவ்வொரு குடும்பமும் வங்கிக்கடன் இல்லா சொந்த வீட்டை பெற்றிருக்க வேண்டும். தேவை என்றால் கடன் இல்லா கார். ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரி பிள்ளைகள். கையில் போதுமான கையிருப்பு. இதனைத்தான் நான் சாதனையாக நினைக்கிறேன்.
இப்போது நமது சாதனைகள் எப்படி இருக்கின்றன? விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிகிறோம். மேலே தொடர கையில் பணமில்லை. இந்தியர் என்றால் அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. பணம் வசூல் செய்து அவர்களுக்கு உதவுகிறோம். அல்லது ஏதோ ஒரு சீன நன்கொடையாளர் மூலம் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்கிறோம். பெரும்பாலும் இதுபோன்ற விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்குப் போதுமான வரவேற்பு இல்லை! அதனால் அந்த சாதனைகள் பயனற்றுப் போய் விடுகின்றன!
நாட்டுக்காகப் பெருமை தேடி தருகிறோம் என்றாலும் நமது பணத்தை நம்பித்தான் நாம் சாதனைகள் புரிய வேண்டிய சூழலில் இருக்கிறோம்! அதற்கும் பணம் தேவை. ஒரு வேளை மற்ற துறைகளில் இது போன்ற பணப்பிரச்சனைகள் எழாது என நம்புகிறோம்.
ஆனால் இது ஒரு சில பேருக்கு எழும் பிரச்சனை. அதனால் அதனைப் பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நாம் நமது குடும்பத்தைப் பற்றி மட்டும் சிந்திப்போம். சொந்த வீடு என்பதை அலட்சியப்படுத்த முடியாது. அது நமக்குச் சொந்தமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் உயர்கல்வி என்பது கூட கல்வி உபகாரச் சம்பளம், கடனுதவி போன்றவை இப்போது தாராளமாகவே கிடைக்கின்றன. பட்டதாரியான பின்னர், அவர்கள் வேலை செய்யும் போது, அந்த பணத்தைத் திருப்பிக்கட்டக் கூடிய வசதிகள் இருக்கின்றன. அதனால் அது பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. நம்மிடம் இருக்கும் சொத்துக்களை விற்று அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதெல்லாம் இந்த காலத்துக்கு ஏற்புடையதல்ல. அவர்களிடமே அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட வேண்டும்.
இன்றைய மலேசிய சூழலில் சாதனை என்றால் சொந்த வீடு, சொந்த கார், கையிருப்பு, பட்டதாரி பிள்ளைகள் - இவைகள் தான் சாதனைகள். இதனை நோக்கித்தான் நமது பயணம் அமைய வேண்டும்.
இது தான் நமது சாதனை!
No comments:
Post a Comment